Chanakya niti கடன் பிரச்சனையில் இருந்து விடுபட சாணக்கியர் சொல்லும் 4 ராஜதந்திரங்கள்

2300 ஆண்டுகளுக்கு முன்பே ஆச்சாரிய சாணக்கியர் சொன்னார் “கடன் என்பது ஒரு மனிதனை உயிரோடு தின்னும் தீ. அதை அணைக்க தெரியாதவன் சாம்பலாவான், தெரிந்தவன் புதிய சாம்ராஜ்யத்தை செதுக்குவான்” என்று. இதைத் தான் இன்றைய வாழ்வியல் தத்துவங்களும் நமக்கு சொல்லுகின்றன. பணம் அனைவரிடமும் இருக்கிறது என்றாலும் அதை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதில் தான் நம்முடைய வாழ்க்கையின் வெற்றி-தோல்வி, இன்ப-துன்பங்கள் அடங்கி உள்ளன. பணம் வைத்திருப்பதால் ஒருவன் பணக்காரனாகி விட முடியாது. யார் ஒருவருக்கு அந்த பணத்தை சரியாக நிர்வாகம் செய்ய தெரிகிறதோ அவன் மட்டுமே பணக்காரனாக, கோடீஸ்வரனாகவும் ஆகிறான். பணத்தை சரியாக கையாள தெரியாதவன் சம்பாதிக்கும் பணத்தை இழப்பதுடன், கடன் வாங்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறான்.

இதுவரை பணத்தை சரியாக கையாளும் வழிமுறை தெரியாமல் நீங்கள் இன்று கடனாளியாக இருக்கலாம். ஆனால் சாணக்கியரின் இந்த 4 உத்திகளைப் பின்பற்றினால் நிச்சயமாக கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். அது மட்டுமல்ல, இன்று கடனாளியாக இருக்கும் நீங்கள், பிற்காலத்தில் பணக்காரராகவும் ஆக முடியும். சாணக்கிய நீதி சொல்லும் இந்த 4 ராஜதந்திர வழிகளை செயல்படுத்தி பாருங்கள்.

கடனில் இருந்து விடுபட சாணக்கியர் சொல்லும் 4 வழிகள் :

1. போலி கெளரவம் வேண்டாம் :
தன் வருமானத்திற்கு மேல் செலவு செய்பவன், தானே தன் சவப்பெட்டியை செதுக்கிக் கொள்கிறான் என்கிறார் சாணக்கியர். பெருமைக்காக வாழாமல், எளிமையாக வாழ பழகுங்கள். கடனில் இருக்கும் போது போலி கெளரவம் தேவையில்லை. பலரும் கடன் வாங்குவதற்கு முக்கிய காரணமே, மற்றவர்கள் முன், தன்னை பெருமையாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற போலி கெளரவம் தான். வாழ்க்கை எளிமையாகி விட்டால் செலவுகள் தானாக குறைந்து, சேமிப்புகள் உயர துவங்கும்.

2. ஆடம்பரம் வேண்டாம்:
ஓட்டை படகில் எவ்வளவு வேகமாக துடுப்பு போட்டாலும் அது மூழ்கத்தான் செய்யும். முதலில் உங்கள் அத்தியாவசியமற்ற செலவுகள் என்னும் ஓட்டையை அடையுங்கள். தேவையில்லாத செலவுகளுக்கு தடை போடுங்கள். தினமும் செய்யும் செலவுகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எது அத்தியாவசியம் என்பதை முதலில் திட்டமிடுங்கள். எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன் அது அவசியமானதா என்பதை ஒரு முறைக்கு பலமுறை யோசிக்க வேண்டும். முதல் முறை அவசியம் என தோன்றும் அந்த பொருள், இரண்டாவது முறை யோசிக்கும் போது தேவையில்லை என்று தோன்றலாம். இப்படி திட்டமிட்டு செலவு செய்தால் தேவையற்ற செலவுகள் குறைந்து விடும்.

3. நேருக்கு நேர் நின்று சமாளியுங்கள் :
பயம், அது உன்னை நெருங்கும் முன்னே நீ அதை அழித்து விடு. கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து ஓடி ஓழியாதீர்கள். அது உங்களை பலவீனப்படுத்தும். சாம, தான, பேத, தண்ட முறைகளை பயன்படுத்துங்கள். நேராக சென்று பேசி, முறையாக கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் பெற்று, உரிய நேரத்தில் சிறிது சிறிதாக கடனை அடைக்கலாம். எதையும் எதிர்கொண்டு, நேருக்கு நேராக பேசுவது நம் மீதான மரியாதையை அதிகப்படுத்தும். நமக்குள் அது கெளரவத்தையும், நம்பிக்கையையும் அதிகரிக்க செய்யும்.

4. ஒரு வருமானம் போதாது :
சோம்பேரிக்கு செல்வம் இல்லை; அறிவில்லாதவனுக்கு வெற்றி இல்லை. கடன் என்பது பெரிய நெருப்பு. ஒரு மாத சம்பளம் என்பது ஒரு வாலி தண்ணீர் மட்டுமே. அதனால் மாத சம்பளம் வரட்டும், கடனை அடைத்து விடலாம் என நினைக்காதீர்கள். அதற்கு வேறு ஒரு செலவு வரலாம். உங்களின் திறமையை பயன்படுத்தி, கூடுதல் வருமானம் ஈட்டுங்கள். தினமும் கூடுதல் நேரம் உழையுங்கள். உங்கள் வருமானம் பல வழிகளில் இருந்து வர வேண்டும். இது விரைவில் கடனில் இருந்து மீளுவதற்கு வழி வகுக்கும்.

Source link