சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை, பதவியில் இருந்து நீக்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய, சிஎஸ்கே தீவிரமாக போராடி வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த, டெல்லி கேபிடல்ஸ் அணி பயிற்சியாளர் கேமங் பதானி உட்பட சிலர், புது தலைமை பயிற்சியாளர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார்கள். இந்நிலையில், இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட்டவர்களையும், புது தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யவும் சிஎஸ்கே விரும்புவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் கோப்பை வென்றுகொடுத்த இந்திய அணி முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள்.
டிராவிட் முடிவு: இந்நிலையில், புது தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சில கடும் நிபந்தனைகளை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், ‘‘தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க, நான் தயார்தான். ஆனால், எனக்கென்று தனித்துவ பாணி இருக்கிறது. அணித் தேர்வு, அணி கட்டமைப்பில் எனக்கென்று ஒரு யோசனை இருக்கும். குறிப்பாக, நானாக சுந்திரமாக முடிவுகளை எடுக்க விரும்புவேன். இதனால், எனது முடிவுகளில் தோனியின் தலையிடு இருக்க கூடாது’’
‘‘மேலும், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மட்டுமே என்னால் பயிற்சியாளராக இருக்க முடியும். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்கு என்னால் தலைமை பயிற்சியாளராக செயல்பட முடியாது. இதற்கு ஒப்புக்கொண்டால், நான் தலைமை பயிற்சியாளர் பதவியை உடனே ஏற்க தயார்’’ என டிராவிட் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிஎஸ்கே முடிவு என்ன? இந்நிலையில், டிராவிட் நிபந்தனைகள் ஏற்க முடியாததாக இருப்பதால், அவரை தேர்வு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வந்துள்ளதாம்.
காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தேர்வு, பயிற்சி திட்டம் போன்ற விஷயங்களில், தோனியின் ஆலோசனையை, முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கேட்டு நடந்தார். தற்போதும், அதேபோல் தோனியின் சோல்பேச்சை கேட்டு நடக்க கூடிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்ய பிசிசிஐ விரும்புகிறது.
இதனால், புது தலைமை பயிற்சியாளராக கேமங் பதானியை நியமிக்கவே சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறதாம். சிஎஸ்கே ரசிகர்கள் பலர், சுரேஷ் ரெய்னாவை பயிற்சியாளர் குழுவிற்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். இருப்பினும், சிஎஸ்கேவுக்கு இந்த திட்டம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
சில நிர்வாகிகள் கருத்து: இந்நிலையில், சிஎஸ்கே நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில், ஐபிஎல் 2027 சீசனுக்கு தலைமை பயிற்சியாளர் இல்லாமல் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். பொறுப்பு தலைமை பயிற்சியாளராக மைக் ஹசியை நியமித்துவிட்டு, அடுத்த சீசன் முடிந்தப் பிறகு இங்கிலாந்து தலைமை பயிற்சியாளராக இருக்கும் பிரெண்டன் மெக்கல்லத்தை கொண்டு வரலாம் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இப்படி, அனைத்து விஷயங்களையும் பேசி ஆராய்ந்து, ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் புது தலைமை பயிற்சியாளரை நியமிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, இந்த விஷயத்தில், இறுதி முடிவை தோனிதான் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
