Dharmendra: `ஷோலே' பட வீரு; பாலிவுட்டின் ஹீ – மேன், ரிடையர்மென்டுக்கு நோ! – தர்மேந்திராவின் கதை!

தர்மேந்திரா மறைவு செய்தியை அறிந்தவுடன், கண்ணீருடன் ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டுள்ளனர். ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த பாலிவுட் லெஜெண்டிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டின் ‘He-Man’ என்று அழைக்கப்பட்ட தர்மேந்திரா அதிக ஹிட் படங்களை கொடுத்தவர்.

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அவருடைய இல்லத்துக்கு வெளியே, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கண்ணீருடன் ஒரு பதாகையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

அந்த பதாகையில், “கடவுளே, தயவு செய்து தர்மாஜியை சீக்கிரமாக குணப்படுத்து!” என எழுதப்பட்டிருந்தது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே, அவருடைய இல்லத்துக்கு வெளியே நீண்ட நேரமாக அவர் நின்றிருந்தார். அந்த 60 வயது நபர் மட்டுமல்ல, தர்மேந்திரா சிகிச்சைப் பெற்று வந்தபோது அவருடைய ரசிகர்கள் பலரும் பல பகுதிகளில் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra Funeral
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra Funeral

இந்த அளவிற்கு பலருக்கும் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் தர்மேந்திரா. பாலிவுட்டில் பல சாதனைகளைப் படைத்த இந்த சீனியர் நடிகருக்கு எண்ணற்ற தீவிர ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

அவர்களின் மனதையெல்லாம் கனமாக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஆம், அவருடைய இல்லத்தில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று மதியம் இயற்கையை எய்தியுள்ளார்.

மறைவு செய்தியை அறிந்தவுடன், கண்ணீருடன் அவருடைய ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டுள்ளனர்.

ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த பாலிவுட் லெஜெண்டிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டின் ‘He-Man’ என்று அழைக்கப்படும் இந்த சீனியர் நடிகர், அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

இன்று இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அனைவருடைய பேவரைட் நடிகர்கள் பட்டியலிலும் தர்மேந்திரா நிச்சயமாக இருப்பார்.

அந்த அளவிற்கு பாலிவுட்டின் முக்கியமான படைப்புகளில் இவரின் முகம் ஹீரோவாகவோ அல்லது வில்லனாகவோ தோன்றியிருக்கிறது.

‘பூல் அவுர் பதார்’, ‘சத்யகம்’, ‘ஷோலே’ போன்ற இவருடைய படைப்புகள் பலவும் பாலிவுட் பெருமையாக சொல்லப்படும் படைப்புகள்.

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra

சிறுவயதில் வறுமையான சூழலிலேயே வளர்ந்தவர் தர்மேந்திரா. வறுமை காரணமாக சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பஞ்சாப்பில் ரெயில்வே கிளார்க்காக வேலை செய்திருக்கிறார்.

சினிமா ஆசையுடன் இருந்த அவர் ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுப்ப வேண்டிய புகைப்படங்களை எடுக்கத் தேவையான பணம் கூட தர்மேந்திராவிடம் இல்லையாம்.

அவருடைய நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெரிதாக எதிர்பார்ப்பில்லாமல், கனவுகளோடு மட்டுமே முயன்ற அவருக்கு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் கிடைத்தது.

பிறகு சினிமாவில் வாய்ப்புத் தேடி மும்பைக்கு வந்தார். குடும்பத்தின் வறுமையான சூழலை அவர் எந்த நேரமும் தனது கனவுகளுக்கு தடையாக்கவில்லை.

“கிடைத்த அறை, கிடைத்த உணவு. சரி, அதுவும் இல்லையென்றால், எனக்கு டீ மட்டுமே போதும்!” என அவர் இருந்ததாக முன்பு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

பெரும் கனவுடன், கிராமங்களிலிருந்து கிளம்பி வருபவர்களுக்கு நகரத்திலிருக்கும் விஷயங்களுக்கேற்ப தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதில் சில தயக்கங்கள் இருக்கும்.

அதே தயக்கங்களும் தொடக்கத்தில் தர்மேந்திராவுக்கும் இருந்திருக்கின்றன. தன்னம்பிக்கையுடன் தைரியமாக தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் பேசுவதில் தொடக்கத்தில் இவருக்கு சில தயக்கங்கள் இருந்திருக்கின்றன.

அதையெல்லாம் உடைத்து வெளிவர சில காலம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகும்கூட தர்மேந்திராவுக்கு நினைத்தபடியான பாதை அமையவில்லை.

இரவு-பகலாக மும்பையில் சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்து தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டியிருக்கிறார்.

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra

பிறகு சின்னச் சின்ன வாய்ப்புகள் மூலம் முன்னேறியவருக்கு ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடுவது பிடிக்காதாம். அவராகவே குதிரை சவாரி செய்வது உள்ளிட்ட பல ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கிவிடுவாராம்.

இப்படி தன் பணிக்கு நேர்மையாக இருந்தவருக்கு பாராட்டுகளும், அடையாளங்களும், விருதுகளும் குவிந்தன. ஒரு காலகட்டத்தில் பிஸியாக வலம் வரத் தொடங்கியவர் ஒரே நாளில் மூன்று படங்களின் ஷூட்டிங்கிற்கு சென்று வருவாராம்.

இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்தவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவை விட்டு சென்று அங்கு நடிப்பதில் தர்மேந்திராவுக்கு நாட்டமில்லை. ஆதலால், அந்த வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறார்.

தொடர்ந்து ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பக்கமும் ரவுண்ட் அடித்திருக்கிறார். பிளாக் & வொயிட் சினிமா, கலர் சினிமா, ரீல் கேமிரா, டிஜிட்டல் கேமிரா, ஓடிடி என அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியையும் இவர் அருகிலிருந்து கண்டிருக்கிறார்.

இந்த உச்ச நட்சத்திரத்துக்குள் ஒரு ரைட்டரும் இருக்கிறாராம். அதைப் பற்றி எந்த இயக்குநர்களும் இதுவரை பெரிதளவில் வெளியில் பேசியதில்லை.

படப்பிடிப்பின்போது ஸ்கிரிப்டில் இருக்கும் சில காமெடி காட்சிகளுக்கு வசனங்கள் எழுதுவாராம். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியை மெருகேற்றுவதற்கான ஐடியாக்களையும் தருவாராம்.

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra

உச்ச நட்சத்திரமாக, மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு நடிகர் அரசியலுக்கு வராமலா இருப்பார்!? அதுவும் நடந்தது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரின் கோரிக்கைக்குப் பிறகு அரசியலுக்கும் வந்தார்.

2004 முதல் 2009 வரை ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். சினிமாவைப் போல அரசியல் வாழ்க்கை அவர் நினைத்தபடி அமையவில்லை. மக்கள், மீடியா என பலராலும் அவர் விமர்சிக்கப்பட்டார். பெரும் அலையாய் விமர்சனங்களை சந்தித்தவர் 2009-க்குப் பிறகு அரசியல் களத்துக்கு வரவில்லை.

இது குறித்து அவரே, “அரசியல் என்னுடைய உலகம் கிடையாது. நானொரு சாதாரண நடிகர். அரசியல் எனக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. நான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை!” என்பதை திட்டவட்டமாக கூறினார்.

அறிமுக நடிகர், சிறந்த நடிகர், வாழ்நாள் சாதனையாளர் எனப் பல ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கும் இந்த லெஜெண்ட் நடிகருக்கு கடந்த 2012-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் கிடைத்தது.

“கேமிரா என்னுடைய வயதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. வயதாகிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சம் பயத்தையும் தருகிறது.” என முன்பொரு பேட்டியில் தர்மேந்திரா கூறியிருந்தார்.

இவருடைய வாரிசுகளான சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல், கிரண் தியோல் என இவருக்கு அடுத்த இரண்டு தலைமுறைகள் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள்.

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra

ஆனால், இத்தனைக்கும் பிறகும், வயதான பிறகும், தர்மேந்திரா ரிடையர்மென்ட் என்பதை நினைத்துப் பார்த்ததே இல்லை. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என கடைசிவரை பல கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து வந்தார்.

இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஒன் லாஸ்ட் டைம் ஹீ – மேன்!

Source link