DMK| தென்காசி மாவட்டத்தில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். அவர் முன்னாள் முதலமைச்சர் என்பதால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் தென்மாவட்டங்களுக்கு அவரை சுற்றுப்பயணம் செய்ய வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தேர்தல் சுற்றுப்பயண பணியை தென்காசி மாவட்டத்தில் இருந்து ஓ.பி.எஸ். இன்று முதல் தொடங்கி உள்ளார்.

தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று மாலை 4 மணிக்கு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சன்புதூர் சேனைத்தலைவர் சமுதாய மண்டபத்திலும், இரவு 7 மணிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியிலும் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துகிறார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், பரமகுடி, திருவாடானை பகுதிகளில் நிர்வாகிகளை சந்திக்கிறார்.

தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தின் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் நிலையில், அந்த ஓட்டுகளை ஒருங்கிணைத்து அதனை தி.மு.க.வுக்கு கொண்டு வருவதற்காக ஓ.பி.எஸ். தென்மாவட்டங்களில் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்த பின்னர் தென்மாவட்ட அரசியலில் சாதி ரீதியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கள்ளர், மறவர் சமுதாயத்தின் ஓட்டுகளை கவர அந்த சமுதாயத்தின் முக்கிய தலைவர்களை ஓ.பி.எஸ் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஒரு வாரம் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி என தென்மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Source link