Doctor Vikatan: உடல் எடையை அதிகரிக்கச் செய்யுமா அவல் உணவுகள்?

Doctor Vikatan: தொடர்ச்சியாக அவல் உணவுகளைச் சாப்பிட்டு பல கிலோ எடை குறைத்ததாக சோஷியல் மீடியாவில் ஒரு பிரபலம் தகவல் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்து நானும் பின்பற்றினேன். எனக்கு எடையும் குறையவில்லை, ரத்தச் சர்க்கரை அளவும் கூடிவிட்டது. அவல் சாப்பிட்டால் எடை குறையாது, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று சிலர் சொல்வது உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

அம்பிகா சேகர்

அவல் சாப்பிட்டாலும் ரத்த சர்க்கரை அளவு (Blood Sugar) மற்றும் உடல் எடை கூடும் என்பது உண்மைதான். சாதாரண அரிசி சாதத்துடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் அல்லது அவல் ஓரளவிற்குச் சிறந்தது என்றாலும், இதிலும் குறிப்பிடத்தக்க அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன.

அவல் என்பது கார்போஹைட்ரேட் வகை உணவே தவிர, புரதச்சத்து (Protein) நிறைந்த உணவு கிடையாது. எனவே, இதனை அளவுக்கு அதிகமாக உண்பது உடல் எடை மற்றும் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். குறிப்பிட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. அவல் உணவை உட்கொள்ளும்போது அதனுடன் அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துச் சமைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவலில் கொழுப்புச்சத்து மிக மிகக் குறைவு என்பதால், இதய ஆரோக்கியத்திற்கு நல்ல உணவாக அமைகிறது.
இட்லி, தோசை போன்ற உணவுகள் அரிசியினால் செய்யப்பட்டு புளிக்க வைக்கப்படுவதால் உடலில் எளிதாக உறிஞ்சப்பட்டு சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தும். ஆனால், அவலில் நார்ச்சத்து (Fiber) அதிகமாக இருப்பதால் அது செரிமானமாக அதிக நேரம் எடுக்கும். இதனால் சர்க்கரை அளவு திடீரென உயராது.

அவல் உணவை உட்கொள்ளும்போது அதனுடன் அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துச் சமைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

சாதாரண அரிசி அவலைவிட, சிறுதானியங்களில் செய்யப்படும் அவல் ஆரோக்கியத்திற்கு இன்னும் சிறந்தது. செரிமானமாகும் நேரத்தைப் பொறுத்தவரை சாதத்தைவிட அவல் சிறந்ததாக இருந்தாலும், கலோரி அளவில் இரண்டும் கிட்டத்தட்ட சமமானவைதான்.

எடைக்குறைப்பு விஷயத்தில் தனக்கு உதவியதாக ஆளாளுக்குச் சொல்கிற விஷயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது. உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் உணவு, இன்னொருவருக்கு ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். எடையைக் குறைக்க வேண்டும் என்றால் முறைப்படி மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரை அணுகி, சரியான வழிகளைத் தெரிந்துகொண்டு பின்பற்றுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Source link