Doctor Vikatan: என் மகனுக்கு 29 வயதாகிறது. பல வருடங்களாகவே உடல் பருமனுடன்தான் இருக்கிறான். சமீபகாலமாக அவன் அடிக்கடி பசிப்பதாகச் சொல்லி, கண்டதையும் சாப்பிடுகிறான். குறிப்பாக நள்ளிரவில் உணவுத் தேடல் அவனுக்கு அதிகமாகிறது. ‘இது உண்மையான பசியா இருக்காது… மனசுதான் காரணம்’ என்று சிலர் சொல்கிறார்கள். உடல் எடையும் ஏறிக்கொண்டே போகிறது. இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது… இதற்குத் தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.
ஏற்கெனவே எடை அதிகமாக இருப்பதால், உங்கள் மகனைப் போன்றவர்களுக்கு கொழுப்பின் சதவிகிதமும் அதிகமாகவே இருக்கும். அதன் விளைவாக சில ஹார்மோன்கள் முறையற்றுச் சுரக்கும். அதாவது பசியுடன் தொடர்புடைய ஹார்மோன்கள். அந்த ஹார்மோன்கள் ‘கிரெலின்’ (Ghrelin) என அழைக்கப்படுகின்றன. வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஹார்மோன் 100 சதவிகிதம் சுரக்கும். அது சுரந்ததும் பசி உணர்வு ஏற்படும்… நன்றாகச் சாப்பிடுவோம். முன்னரே குறிப்பிட்டபடி, வயிற்றின் கொள்ளளவு போதும் என உணர்த்தியதும், வேறு சில ஹார்மோன்கள் சுரக்கும்.
இன்க்ரெட்டின்ஸ் (Incretins) என்ற இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது, கிரெலின் ஹார்மோன் பூஜ்ஜியம் என்ற அளவுக்கு வந்து, சாப்பிட்டது போதும் என உணர்த்தும். சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இந்த கிரெலின் ஹார்மோன் மீண்டும் சுரக்கும். அதற்குக் காரணம், உடல் பருமன். கொழுப்பின் சதவிகிதம் அதிகமிருப்பவர்களுக்கும், அதன் காரணமாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உள்ளவர்களுக்கும் கிரெலின் மீண்டும் சுரந்து, மீண்டும் பசி எடுக்கும்.
எடை அதிகமுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட இந்த ஹார்மோன் பூஜ்ஜியமாக மாறாமல், 20 முதல் 30 சதவிகிதம் வரை மீண்டும் மீண்டும் சுரந்து கொண்டே இருக்கும். எனவே, ஹார்மோன் தொந்தரவுகளால் ஏற்படும் உணவுத் தேடலாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்டவர்களால் இதைக் கட்டுப்படுத்தவே முடியாது.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, தூக்கம் தொடர்பான பிரச்னைகளும் அதிகமிருக்கும். அதன் காரணமாக சரியான நேரத்துக்குச் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் பசியெடுப்பது போன்ற உணர்வு ஏற்படும். தாமதமாகத் தூங்கச் செல்வோருக்கு, தூங்குவதற்கு பல மணி நேரம் முன்னதாகச் சாப்பிட்டிருந்தால், விழித்திருக்கும் நேரத்தில் பசி எடுக்கும். அதனாலும் அவர்கள் கண்ட நேரத்தில் உணவுகளைத் தேடுவார்கள்… மீண்டும் மீண்டும் சாப்பிடுவார்கள்.
இந்தப் பிரச்னைகள் எல்லாமே உடலியல் தொடர்பான, ஹார்மோன் தொடர்பான பிரச்னைகள்தான், உளவியல் பிரச்னை அல்ல என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதைத் தவிர்த்து லேட் நைட் சாப்பாட்டைத் தேடுவோரையும் அதிகம் சாப்பிடுவோரையும் பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்யவோ, காயப்படுத்தவோ செய்யாதீர்கள். முடிந்தால் அவர்கள் பிரச்னையைச் சரிசெய்ய, எடையைக் குறைக்க உதவுங்கள். மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகு
