Doctor Vikatan: மனைவிக்காக வாங்கிய பிரெக்னன்சி கிட்டில், கணவன் தனது சிறுநீரை டெஸ்ட் செய்ததாகவும், அதில் அவருக்கு பிரெகன்சி பாசிட்டிவ் என்று வந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஆண்களுக்கும் பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று வருமா… இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் அரிதினும் அரிது. ஆர்வக்கோளாறில் இப்படி பிரெக்னன்சி டெஸ்ட் செய்து பார்க்கும் எல்லா ஆண்களுக்கும் பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் வரவும் வாய்ப்பில்லை. ஆனால், அரிதினும் அரிதாக இப்படி வரும்போது, அதை அந்த ஆணுக்கான வார்னிங் சிக்னலாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன.
இந்த விஷயத்துக்குள் போவதற்கு முன், ‘ஹோம் பிரெக்னன்சி கிட்’ (Home pregnancy test kit ) எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். ஹெச்சிஜி (Human chorionic gonadotropin) என்ற ஹார்மோனை, சிறுநீரில் கண்டுபிடிப்பதுதான் பிரெக்னன்சி டெஸ்ட்.
பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஹார்மோனானது பிளாசன்ட்டா (Placenta) எனப்படும் நஞ்சுக்கொடியில் இருந்து உற்பத்தியாகிறது. கரு பதிந்ததும், பிளாசன்ட்டாவில் இருந்து ஹெச்சிஜி என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. அதனால்தான் பிரெக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ் என்று வருகிறது. ஆனால், நம் உடலானது கர்ப்பத்தின்போது மட்டுமன்றி, வேறு சில சூழல்களிலும் இந்த ஹார்மோனை உற்பத்தி செய்யலாம்.
உதாரணத்துக்கு, ஆணுக்கு விந்துப்பையில் புற்றுநோய் (Testicular cancer) பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஹார்மோன் சுரக்கலாம். இதை ‘ஜெர்ம் செல் டியூமர்ஸ்’ (Germ cell tumors ) என்று சொல்வோம். இது ரத்தத்தில் நுழைவதால், சிறுநீரில் கலந்து பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று காட்டும்.

இந்த வகைப் புற்றுநோய் செல்களும், ஆரம்பநிலை பிளாசென்ட்டல் செல்களைப் போல ஹெச்சிஜி ஹார்மோனை உற்பத்தி செய்யும். அதற்காக இந்த மாதிரி பிரெக்னன்சி டெஸ்ட் செய்து பார்த்துவிட்டு, அந்த ரிசல்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு, ஓர் ஆணுக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிக்கவோ, உறுதிசெய்யவோ முடியுமா என்றால், நிச்சயம் முடியாது.
பிரெக்னன்சி டெஸ்ட்டை, புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கான டெஸ்ட்டாக ஒருபோதும் நினைக்கவேகூடாது. டெஸ்டிகுலர் கேன்சரில் எல்லாமே இதுபோல ஹெச்சிஜியை உற்பத்தி செய்யாது. எனவே, ஒருவேளை புற்றுநோய் இருந்தும், பிரெக்னன்சி டெஸ்ட் கிட்டில் இந்த ஹார்மோன் இருப்பது தெரியவராமல் இருந்தால், மிகப்பெரிய ஆபத்து அலட்சியப்படுத்தப்படும்.
டெஸ்டிகுலர் கேன்சருக்கான அறிகுறிகளை ஆண்கள் கண்டறியத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு விரைப்பை அல்லது இரண்டு விரைப்பைகளில் வலியே இல்லாத சின்ன வீக்கம், கட்டி இருக்கலாம். விதைப்பையில் கனமான உணர்வு இருக்கலாம். அடிவயிற்றில் வலி, விரைப்பையில் நீர்கோத்துக்கொள்வது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவர் முதலில் உடல்ரீதியாகப் பரிசோதனை செய்து பார்ப்பார். பிறகு விரைப்பைக்கு அல்ட்ராசவுண்ட் சோதனை செய்யச் சொல்வார். பிறகு ரத்தப் பரிசோதனைக்குப் பரிந்துரைப்பார். இவற்றை வைத்து, ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் இருந்தால் இன்னும் சில டெஸ்ட்டுகளைப் பரிந்துரைப்பார்.

டெஸ்டிகுலர் கேன்சரைப் பொறுத்தவரை, ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால், அதைக் குணப்படுத்த வாய்ப்புகள் மிகமிக அதிகம். புற்றுநோய் பாதிப்பு என்பது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்து கூடுதலாக சில சிகிச்சைகள் தேவைப்படலாம்.
விரைப்பைகளைச் சுய பரிசோதனை செய்து பார்ப்பதும், அசாதாரண அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவதும்தான் இதில் முக்கியம். மற்றபடி இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகள், செய்திகளைப் பார்த்து விரைப்பை புற்றுநோயை விளையாட்டுத்தனமாக அணுக வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
