Edappadi Palaniswami| தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. கடும் தோல்வியை சந்திக்கும்- ஓ.பன்னீர்செல்வம்

கடையநல்லூர்:

தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தென்காசி மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கினார்.

கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரில் நேற்று இரவு நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:-

தேர்தல் வருகிற போது அரசியல் கட்சிகள் எல்லாம் படையெடுக்கின்றனர் அதிலும் பழனிசாமி என்று ஒருவர் இருக்கிறார். தேர்தல் பிரசாரத்தில் கத்து கத்து என கத்துகிறார். என்ன சொல்லுகிறார் என்பதே புரியவில்லை. அவரின் பேச்சுக்கு மக்களே பதில் சொல்லி விடுவார்கள்.

அவருக்கு ஒன்றே ஒன்று தெரியும், தன்னை ஆளாக்கியவர்களுக்கு துரோகம் செய்வது. அரசியலில் அறிமுகப்படுத்தியவர்களை துரோகம் செய்வது. அவர் ஆட்சியில் நீடிப்பதற்கும் அவரை காப்பாற்றியவருக்கும் துரோகம் செய்வது. முதலமைச்சராக ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவியை தந்தவரை எவ்வாறு துரோகம் செய்தார் என்ன சொன்னார் என்பது எல்லாம் உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைத் தான் சந்தித்து வருகிறார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா தான் என்ற தீர்மானத்தை தூக்கி போட்டுவிட்டு நான் தான் பொதுச்செயலாளர், நான் தான் முதலமைச்சர் எனக் கூறி எடப்பாடி 10 தேர்தலில் படுதோல்வி அடைந்தது தான் உண்மை. ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.

நிச்சயம் எடப்பாடி ஒரு இயக்கத்தின் தலைவராக இருக்க முடியாது. அனைவருக்கும் சொந்தமான இயக்கமாக இருந்த அண்ணா தி.மு.க.வை தற்போது குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த கட்சியாக மாற்றி விட்டது அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி செய்த துரோகம்.

அ.தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் 58 சட்டமன்ற தொகுதியில், அம்மா, எம்.ஜி.ஆர். போட்டியிட்ட ஆண்டிப்பட்டி உட்பட 40 தொகுதிகளில் கடுமையான தோல்வியை சந்தித்தது.

உண்மையான அ.தி.மு.க.வின் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தென் மாவட்ட மாவட்டங்களில் கடும் தோல்வியை மீண்டும் சந்திக்கும். தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்டதை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லதுரை உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Source link