அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் ஐந்தாண்டு பணி அனுபவத்தைப் பெற்றவுடன் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் எனத் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தேசிய நல்வாழ்வுக் குழும இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்கள் குறித்துச் சங்க நிர்வாகிகள் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிப்பதோடு, ஒப்பந்த ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்த காணொளிகளும் இணையத்தில் பரவி வருகின்றன.
ஆனால், தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய தமிழக அரசோ, ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, ” அரசு ஊழியர்கள் அரசை விமர்சிக்கக் கூடாது; மீறினால் நன்னடத்தை விதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற மிரட்டல் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போதுள்ள அரசு ஊழியர் நடத்தை விதிகளே அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானவை என்பதும், இந்த விதிகள் எந்தவொரு சங்க நிர்வாகியையும் கட்டுப்படுத்தாது என்பதும் ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் புரிய வேண்டும்.
அரசை விமர்சிக்கச் சங்க நிர்வாகிகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் முழு உரிமை வழங்கியுள்ளது என்பதை ஆட்சியாளர்கள் முதலில் உணர வேண்டும். மேலும், ஒப்பந்த ஊழியர்கள் தொழிற்சங்க உரிமை பெற்றவர்கள் என்பதையும், தேசிய குழும இயக்கத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அரசு ஊழியர்களின் நன்னடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது என்பதையும் ஆட்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண்பதற்குப் பதிலாக, இது போன்ற மிரட்டல் சுற்றறிக்கைகளை வெளியிடுவது ஆட்சியாளர்களுக்கே எதிராகத் திரும்பும் என்பதை எச்சரிக்கையாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எஸ்மா (ESMA), டெஸ்மா (TESMA) போன்ற அடக்குமுறைகளை உடைத்தெறிந்து பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்து நின்ற வரலாற்றுச் சொந்தக்காரர்கள் தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆவர். அடக்குமுறைகளாலும் மிரட்டல்களாலும் நியாயமான போராட்டங்களை ஒருபோதும் ஒடுக்க முடியாது என்பதைத் தமிழக அரசு புரிந்து கொண்டு, இதுபோன்ற தேவையற்ற சுற்றறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மட்டுமல்லாமல், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம், பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினரும் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். விரைவில் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று உறுதியுடன் காத்திருக்கின்றனர்.
