EPS Speech | அ.தி.மு.க. ஆட்சியில் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் – எடப்படி பழனிசாமி

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை முடித்துவிட்டு, திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலை, ஜெயநகரில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, “இது விவசாயம் நிறைந்த மாவட்டம், விவசாயிகளுக்காக அ.தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன. தூர்வாரப்பட்டதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. விலையில்லாமல் மண் கொடுத்தோம். தி.மு.க.வில் சில்லறை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன, அவற்றில் 8 ஆயிரம் ஏரிகள் 1240 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் கட்டுப்பாட்டில் இருக்கும் 26 ஆயிரம் கண்மாய்களும் தூர்வாரப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மீண்டும் விவசாயிகளுக்கு வண்டல் மண் கிடைக்கும்.

விவசாயிகள் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச, எந்நேரமும் மின் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கொடுக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் ஷிஃப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதால், இரவு வேளையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் வழங்கப்படும்.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 2016-ஆம் ஆண்டு அம்மா முதல்வராக இருந்தபோதும், அடுத்ததாக 2021-ஆம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோதும் என ஒரே அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. என்னுடைய ஆட்சியில் மட்டும் சுமார் 12,100 கோடி ரூபாய் அளவுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும்,” என்றார்.

Source link