நம்மில் பலர் இந்தப் பிரச்சினையைச் சந் தித்திருப்போம். UPI மூலமாகப் பணம் செலுத்தும்போது சில நேரங்களில் அந்தப் பரிவர்த்தனை தோல்வியடைந்துவிடும். ஆனால் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிடும். அதேபோல, சில நேரங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது நம் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிடும். ஆனால் ஏடிஎம்மிலிருந்து பணம் வெளியே வராது. இதுபோன்ற தோல்வியுற்ற பரிவர்த்தனைகள் நமக்கு பிரச்சினையாக இருக்கும். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் உங்கள் வங்கி பணத்தைத் திருப்பித் தராவிட்டால், தாமமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
பொதுவாக, சர்வர் பிரச்சினை, ஏடிஎம்மில் பணம் இல்லாதது, செஷன் டைம்-அவுட், குறைந்த இணைய வேகம் போன்ற பல்வேறு காரணங்களால் பரிவர்த்தனை தோல்வியடையலாம். பரிவர்த்தனை வகை மற்றும் பொருந்தக்கூடிய திருப்பிக் கொடுக்கும் காலக்கெடுவைப் பொறுத்து இந்த இழப்பீடு அமையும். பரிவர்த்தனை என்பது ‘கிரெடிட்-புஷ்’ நிதிக் பரிமாற்றமாக இருந்து, பணம் அனுப்பியவரின் கணக்கில் பணம் பற்று வைக்கப்பட்டும், பெறுநரின் கணக்கில் வரவு வைக்கப்படாவிட்டால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அது வரவு வைக்கப்பட வேண்டும். தவறினால் பெறுநருக்கு அபராதம் செலுத்தப்பட வேண்டும்.
மேலும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, குறிப்பிட்ட காலக்கெடுவைத் தாண்டி, பணம் அனுப்பும் வங்கியின் தரப்பில் பரிவர்த்தனையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் பணம் அனுப்புபவருக்கு அபராதம் செலுத்தப்பட வேண்டும். தொடர்பு இணைப்புகளில் கோளாறு, ஏடிஎம்மில் பணம் இல்லாதது, செஷன் டைம்-அவுட் போன்ற வாடிக்கையாளர் தரப்பில் எந்தத் தவறும் இல்லாமல், முழுமையாக முடிக்கப்படாத பரிவர்த்தனையே தோல்வியடைந்த பரிவர்த்தனை என்று அழைக்கப்படும். முழுமையான அல்லது சரியான தகவல்கள் இல்லாத காரணத்தினால் பெறுநரின் கணக்கிற்குப் பணத்தைச் செலுத்த முடியாமல் போவதும், பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் ஏற்படும் தாமதமும் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளில் அடங்கும் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் கூறுகின்றன.
2019ஆம் ஆண்டின் அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த டர்ன் அரவுண்ட் டைம் (TAT) மற்றும் வாடிக்கையாளர் இழப்பீட்டு விதிமுறைகள், “வங்கி” என்ற சொல் வங்கி அல்லாத நிறுவனங்களையும் குறிக்கும் என்றும், அவை செயல்பட அனுமதிக்கப்பட்ட இடங்களில் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்துகின்றன. உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் அல்லது அனுப்புநரும் பெறுநரும் இந்தியாவில் உள்ள பரிவர்த்தனைகள் மட்டுமே இந்த வரம்பிற்குள் வரும்.
UPI, ஏடிஎம் அல்லது கார்டு பரிவர்த்தனை தோல்வியடைந்தது என்பதற்காக மட்டுமே ரிசர்வ் வங்கியின் விதிப்படி நாளொன்றுக்கு 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதில்லை. பணம் பற்று வைக்கப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வங்கி அல்லது கட்டண முறை அந்தப் பரிவர்த்தனையைத் திரும்பச் செலுத்தத் தவறும்போது இது பொருந்தும். பணம் வராத ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் தோல்வியடைந்த வணிகர் UPI அல்லது கார்டு கட்டணங்களுக்குப் பொதுவாக T+5 நாட்கள் அவகாசமாகும். பெறுநருக்குப் பணம் சேராத UPI நிதிப் பரிமாற்றத்திற்கு, T+1 நாளுக்குள் பணத்தைத் திருப்பியளிக்க வேண்டும். இந்தக் காலக்கெடு மீறப்பட்டால், தாமமாகும் ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் எங்குமே கோரிக்கை வைக்காமலேயே இந்த இழப்பீட்டுத் தொகை தானாகவே வரவு வைக்கப்பட வேண்டும். 100 ரூபாய் இழப்பீடு என்பது தோல்வியடைந்த பரிவர்த்தனைக்காக மட்டும் அல்ல, தாமதமான தீர்வுக்கு வழங்கப்படும் இழப்பீடாகும். UPI, ஏடிஎம் மற்றும் கார்டு தோல்விகளுக்கு ரிசர்வ் வங்கி வெவ்வேறு திருப்பியளிக்கும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. ந்தக் கால அவகாசத்திற்குள் பணம் திருப்பித் தரப்பட்டால் எந்த இழப்பீடும் இல்லை; காலக்கெடு மீறப்பட்டால் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் தானாகவே செலுத்தப்படும்.
புகார் அளித்த தேதியிலிருந்து அல்லாமல், தோல்வியடைந்த பரிவர்த்தனை நடந்த காலண்டர் தேதியிலிருந்து ரிசர்வ் வங்கியின் காலக்கெடு தொடங்குகிறது. தோல்வியடைந்த UPI நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் கார்டு-டூ-கார்டு பரிமாற்றங்களுக்குப் பொதுவாக T+1 நாளும், பணம் வழங்கப்படாத ஏடிஎம் வழக்குகள், தோல்வியடைந்த UPI வணிகர் கட்டணங்கள் மற்றும் தோல்வியடைந்த இ-காமர்ஸ் கார்டு பரிவர்த்தனைகளுக்கு T+5 நாட்களும் நிர்ணயிக்கப்பட்ட திருப்பியளிக்கும் காலமாகும்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகும் தாமதமானால் நாளொன்றுக்கு 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
