இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த விளக்கத்தில், “இந்தச் சட்டம் சட்டபூர்வமான அமைப்புகளை இலக்காகக் கொண்டதல்ல, மாறாக வெளிநாட்டு நிதிகளின் சட்டவிரோதமான அல்லது “தேசவிரோத” பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதற்கும், வெளிநாட்டுப் பங்களிப்புகள் நலத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் கொண்டுவரப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “FCRA சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. இது கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. ஆனால், அப்படியான பொய்ப் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்,” என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் கொண்டுவந்த சட்டம்:
1976-ல் இந்திரா காந்தி ஆட்சியின் கீழ் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோதுதான் இந்தச் சட்டம் முதன்முதலில் அமலுக்கு வந்தது. இந்தியாவில் உள்ள என்ஜிஓக்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், அதை ஒழுங்கப்படுத்த இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக அப்போது சொல்லப்பட்டது. 2010-ல் பெரிய திருத்தத்தை காங்கிரஸ் கொண்டுவந்தது. அந்தத் திருத்தம்தான், எஃப்சிஆர்ஏ சட்டத்தின் வளையத்துக்குள் ஊடக அமைப்புகளையும் கொண்டு வந்தது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் என்ற விதிமுறையையும் கொண்டு வந்தது.
அதன்பிறகு மூன்று முறை பாஜக இந்தச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்தது. 2020-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான வெளிநாட்டுப் பங்களிப்புகள் டெல்லியில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட எஸ்பிஐ கணக்குகள் மூலமாக மட்டும்தான் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வந்தது. அதேபோல் என்ஜிஓக்களின் நிர்வாகச் செலவினங்களுக்கான அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகக் குறைத்தது.
கரோனா பெருந்தொற்றுக் கால திணறல்களுக்கு மத்தியில் அமலுக்கு வந்த இந்தத் திருத்தங்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால், “வெளிநாட்டு நிதி பங்களிப்பால் தேசிய அரசியலில் தாக்கம் ஏற்படுமென்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாகவே உள்ளது. அதனால், வெளிநாட்டு நிதி பங்களிப்பின் அளவு என்பது தவிர்க்க முடியாத நிலையில் குறைந்தபட்சமாகவே இருக்கவேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
