நல்ல வருமானத்தைப் பெறுவதோடு உங்கள் சேமிப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால் நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் கடன் சார்ந்த பரஸ்பர நிதி (Debt Mutual Funds) ஆகியவை மிகவும் பிரபலமான தேர்வுகளாக இருக்கின்றன. இவை இரண்டும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீடு களாகக் கருதப்பட்டாலும், வருமானம், இடர் (risk), வரி மற்றும் பணத்தை திரும்பப் பெறும் வசதிகள் ஆகியவற்றில் வேறுபடுகின்றன. எனவே, முதலீடு செய்வதற்கு முன் உங்கள் தேவைகளுக்கு எந்தத் தேர்வு மிகவும் பொருத்தமானது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
நிலையான வைப்புத்தொகை!
நீங்கள் FD திட்டத்தில் முதலீடு செய்யும்போது வங்கி முன்கூட்டியே ஒரு நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதாவது, முதலீட்டுக் காலத்தின் முடிவில் முதிர்வுத் தொகையாக உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரியும். இதனால்தான் ரிஸ்க் இல்லாமல் உறுதியான வருமானத்தை விரும்புவோருக்கு FD திட்டம் ஒரு நம்பகமான தேர்வாகக் கருதப்படுகிறது.
கடன் சார்ந்த பரஸ்பர நிதி!
மறுபுறம், கடன் சார்ந்த பரஸ்பர நிதிகள் என்பவை அரசுப் பத்திரங்கள், நிறுவனப் பத்திரங்கள் மற்றும் பிற கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இவற்றின் வருமானம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவதில்லை. சந்தை வட்டி விகித மாற்றங்களைப் பொறுத்து அவை மாறுபடலாம். இருப்பினும், சாதகமான சூழலில் நிலையான வைப்புத்தொகையை விட கடன் நிதிகள் சிறந்த வருமானத்தை வழங்கலாம்.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்!
பணப்புழக்கம் (liquidity) – அதாவது தேவைப்படும்போது பணத்தை திரும்பப் பெறும் வசதி – என்பதில் இவ்விரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. FD திட்டங்களை முதிர்வு காலத்திற்கு முன்பே முடித்துக்கொள்ள (break) முடியும். ஆனால், வங்கி பொதுவாக அதற்கு அபராதம் விதிக்கும். மேலும் இதனால் வட்டி விகிதமும் குறையலாம்.
மறுபுறம், பெரும்பாலான கடன் சார்ந்த பரஸ்பர நிதிகள் ஒப்பீட்டளவில் எளிதாகப் பணத்தை திரும்பப் பெறும் வசதியை வழங்குகின்றன. இருப்பினும், சில திட்டங்களில் முன்கூட்டியே பணத்தை எடுப்பதற்கு ‘எக்சிட் லோட்’ (exit load) எனப்படும் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதில் முதலீட்டாளர்கள் வரி விதிப்பு குறித்தும் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். FD முதலீடுகள் மூலம் ஈட்டப்படும் வட்டி உங்கள் மொத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப வரி விதிக்கப்படுகிறது. அதே நேரம், 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு வாங்கப்பட்ட கடன் சார்ந்த பரஸ்பர நிதிகளில் கிடைக்கும் வருவாயும் முதலீட்டாளரின் வருமான வரி வரம்பிற்கு ஏற்ப வரிக்கு உட்பட்டதாகும். எனவே, இவ்விரு விருப்பங்களுக்கும் இடையிலான வரி வித்தியாசம் முன்பு இருந்ததைப் போல இப்போது பெரிய அளவில் இல்லை.
இந்த இரண்டில் எது சிறந்தது?
முதலீட்டுத் தொகையைப் பாதுகாப்பதும், உறுதியான வருவாயைப் பெறுவதும் உங்கள் முக்கிய நோக்கமாக இருந்தால் நிலையான வைப்பு நிதி (FD) ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சந்தை சார்ந்த சில அபாயங்களை ஏற்கத் தயாராக இருந்து, அதிக வருவாய் வாய்ப்பை விரும்பி, உங்கள் முதலீட்டுக் காலத்திற்கு ஏற்ற சரியான கடன் சார்ந்த நிதியைத் தேர்ந்தெடுத்தால், கடன் சார்ந்த பரஸ்பர நிதிகளும் நல்ல தேர்வாக அமையும்.
இதுபோன்ற முதலீட்டு முடிவுகள் எப்போதும் உங்கள் நிதி இலக்குகள், அபாயத்தை ஏற்கும் திறன் மற்றும் முதலீட்டுக் காலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
