Fuel Tank: காரின் எரிபொருள் நிரப்பும் பகுதி எந்தப் பக்கம்? – இது தெரியாமப் போச்சே?! – 5

ஒவ்வொரு முறை பெட்ரோல் நிலையத்திற்குச் செல்லும்போதும், குறிப்பாக வாடகை கார் அல்லது புதிய காரை ஓட்டும்போதும் “பெட்ரோல் டேங்க் எந்தப் பக்கம் இருக்கு?” என்று தலையை வெளியே நீட்டிப் பார்ப்பவர்கள் ஏராளம். பலருக்கும் இந்தக் குறியீடு பற்றிய ரகசியம் தெரிவதில்லை.

fuel pump symbol

கார் டேஷ்போர்டில் எரிபொருள் அளவைக் காட்டும் மீட்டரில் (Fuel Gauge), பெட்ரோல் பம்ப் குறியீட்டிற்குப் பக்கத்தில் உள்ள சிறிய அம்புக்குறி எந்தப் பக்கத்தை நோக்கி இருக்கிறதோ, அந்தப் பக்கத்தில்தான் காரின் எரிபொருள் நிரப்பும் பகுதி அமைந்திருக்கும்.

சுவாரசியமான வரலாறு

இந்தக் குறியீட்டின் பின்னணியில் சுவாரசியமான வரலாறு உள்ளது. 1989-ம் ஆண்டில், ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் வடிவமைப்பாளரான ஜிம் மொய்லான் (Jim Moylan) என்பவர்தான் இந்த எளிமையான யோசனையை முதன்முதலில் உருவாக்கினார்.

ஒரு மழை நாளில், ஜிம் மொய்லான் கார் ஒன்றை பெட்ரோல் நிரப்ப ஓட்டிச் சென்றார். பெட்ரோல் போடுவதற்காக வண்டியை நிறுத்தியபோது, எரிபொருள் மூடி இருந்த திசைக்கு எதிர்ப்புறமாக நிறுத்திவிட்டார். மழையில் நனைந்தபடியே பெட்ரோல் நிரப்ப வேண்டியிருந்ததால் அவருக்குக் கடும் எரிச்சல் ஏற்பட்டது.

 fuel pump symbol
fuel pump symbol

உடனடியாக, டேஷ்போர்டில் உள்ள எரிபொருள் மீட்டரிலேயே ஒரு சிறிய அம்புக்குறியை வைக்கலாம் எனத் தனது மேலதிகாரிகளிடம் குறிப்பு எழுதி அனுப்பினார். இவரது ஐடியா ஏற்றுக்கொள்ளப்பட்டு, நவம்பர் 1989-ல் வெளிவந்த ஃபோர்டு எஸ்கார்ட் (Ford Escort) மற்றும் மெர்குரி ட்ரேசர் (Mercury Tracer) கார்களில் இந்தக் குறியீடு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்பு இது, உலகம் முழுவதும் ஒரு நிலையான குறியீடாக மாறியது. எந்தவிதமான தொழில்நுட்ப ஆராய்ச்சியும் இல்லாமல், ஒரு பைசா செலவில்லாமல், கோடிக்கணக்கான ஓட்டுநர்களின் எரிச்சலைத் தவிர்த்த மிகச் சிறந்த கண்டுபிடிப்பு இதுதான்.

Source link