ஹோட்டல்களில் உங்களுக்கே தெரியாமல் சேவைக் கட்டணம் என்ற பெயரில் பணம் பிடிக்கப்பட்டால் நீங்கள் உடனே புகார் கொடுக்கலாம். சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது கடும் நடவடிக்கை பாயும்.
வார இறுதி நாட்களில் குடும்பத்தினரோடு அல்லது நண்பர்களுடன் வெளியே சென்று சாப்பிடுவதை பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். ஆனால், சில சமயங்களில் ஹோட்டல் பில்லை பார்க்கும்போது அந்த மகிழ்ச்சி காணாமல் போய்விடும். இதற்கு முக்கியக் காரணம், உணவு ரசீதின் இறுதியில் மறைமுகமாகச் சேர்க்கப்படும் ‘சேவைக் கட்டணம்’ (service charge) ஆகும். ஹோட்டல் உணவு ரசீதுகளில் உள்ள சேவைக் கட்டணம் மக்களை எரிச்சலூட்டுகிறது. ஆனால், உங்களிடம் எந்தவொரு உணவகமும் உணவுக்கான கட்டண ரசீதில் தானாகவே சேவைக் கட்டணத்தைச் சேர்க்க முடியாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, வாடிக்கையாளரை கட்டாயப்படுத்திச் செலுத்த வைப்பது முற்றிலும் சட்டவிரோதமானது.
41 உணவகங்கள் மீது CCPA அதிரடி நடவடிக்கை!
நுகர்வோரின் பணத்தை நியாயமற்ற முறையில் வசூலிக்கும் உணவகங்களுக்கு எதிராக அரசு இப்போது தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய நுகர்வோர் உதவி எண் மூலம் பெறப்பட்ட ஏராளமான புகார்களின் அடிப்படையில், CCPA தானாக முன்வந்து விசாரணை நடத்தி, நாடு முழுவதும் உள்ள 41 பிரபலமான உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரமாக, புகார்களுடன் சேர்த்து ரசீதுகளையும் அவர்கள் சமர்ப்பித்திருந்தனர்.
அபராதத்துடன் பணத்தைத் திரும்பச் செலுத்த உத்தரவு!
விதிமீறல் தொடர்பான ஒரு வழக்கில் பிரபலமான ‘Chaayos’ பிராண்டான ‘Sunshine Tea House Private Limited’ நிறுவனத்திற்கு எதிராக CCPA உத்தரவு பிறப்பித்து, ரூ. 50,000 அபராதம் விதித்துள்ளது. சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட சேவைக் கட்டணத்தை வட்டியுடன் சேர்த்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்குத் திரும்பச் செலுத்தவும் அந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் ரசீதுகளில் சேவைக் கட்டணம் தானாகவே சேர்க்கப்படாத வகையில், தனது அனைத்து கிளைகளிலும் உள்ள பில்லிங் மென்பொருளை (billing software) புதுப்பிக்குமாறும் ‘Chaayos’ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 உணவகங்கள் மீதான வழக்குகளில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேவைக் கட்டணம் தொடர்பான வழிகாட்டுதல்கள்!
2022ஆம் ஆண்டின் ஜூலை 4ஆம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின்படி, நம் நாட்டில் சேவைக் கட்டணம் தொடர்பாக மிகக் கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளன. அதன்படி, சேவைக் கட்டணத்தைச் செலுத்துவதா இல்லையா என்பது முற்றிலும் வாடிக்கையாளரின் விருப்பத்தைப் பொறுத்தது. இது எந்த வகையிலும் கட்டாயமல்ல. ஒருவேளை சேவைக் கட்டணத்தைச் செலுத்த வாடிக்கையாளர் மறுத்தால், உணவக நிர்வாகம் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கவோ அல்லது உணவு வழங்க மறுக்கவோ முடியாது. அவ்வாறு செய்வது நுகர்வோர் உரிமைகளை மீறும் செயலாகக் கருதப்படும்.
மேலும், சேவைக் கட்டணம் என்பது விருப்பத்தின் பேரில் செலுத்தப்படுவது என்பதை உணவகங்கள் தங்கள் மெனு கார்டுகள் அல்லது அறிவிப்புப் பலகைகளில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவு பில்லில் ஏதேனும் முரண்பாட்டை நீங்கள் கவனித்தால், உடனடியாகப் புகார் அளிக்கலாம். அடுத்த முறை உணவகக் கட்டண ரசீதில் உங்கள் அனுமதியின்றி சேவைக் கட்டணம் சேர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்தால், நீங்கள் அது குறித்துப் புகார் அளிக்கலாம். தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் அதிகாரப்பூர்வ கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1915என்ற எண்ணை நேரடியாக அழைக்கலாம்.
அதேபோல, நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ NCH இணையதளம் மற்றும் செயலி மூலம் ரசீதின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து ஆன்லைனிலும் புகார் அளிக்கலாம். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உணவகம் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு மட்டுமின்றி, பெரும் அபராதத்திற்கும் உள்ளாக்கப்படும். எனவே, விழிப்புணர்வுள்ள நுகர்வோராக இருந்து உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் குரல் கொடுக்கலாம்.
