Ilaiyaraaja: `137 படப் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை' – இளையராஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இளையராஜாவுக்கு டெல்லி நீதிமன்றம் 137 படப் பாடல்களை பயன்படுத்த தடை விதித்திருக்கிறது.

Ilaiyaraaja

இசைஞானி இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களை அவர் பயன்படுத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பிரபல இசை நிறுவனமான “சரிகம’ (Saregama) இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததிருந்தது. அந்த வழக்கில், “1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான 134 திரைப்படங்களின் இசை உரிமைகளை, அந்தந்த தயாரிப்பாளர்களிடம் இருந்து சரிகம நிறுவனம் தங்களுக்குரிய பிரத்யேக உரிமமாகப் பெற்றுள்ளது.

இளையராஜா
இளையராஜா

ஆனால், கடந்த ஜனவரி மாதம் இளையராஜா தரப்பில் அனுப்பப்பட்ட சட்டப்பூர்வ அறிவிப்பில், இந்தப் பாடல்கள் மீதான முழு உரிமையும் அவருக்கே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விசாரித்து உரிய நீதி பெற்றுத்தரவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி துஷார் ராவ் கெடெலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரிகம நிறுவனம், “இளையராஜா தனது பாடல்களை அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் (iTunes) மற்றும் ஜியோசாவ்ன் (JioSaavn) போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றிப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார்.

1957-ம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டத்தின்படி, ஒரு திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட இசையில், ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படாவிட்டால், அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் ஆவார். அதன் அடிப்படையில், தயாரிப்பாளர்களிடம் இருந்து தாங்கள் முறைப்படி உரிமங்களைப் பெற்றிருக்கிறோம். எனவே, இளையராஜாவின் அனுமதி, எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உலகளாவிய மற்றும் நிரந்தர பதிப்புரிமை ஒப்பந்தத்தை மீறும் செயல்” எனக் குற்றம் சாட்டியது.

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி துஷார் ராவ் கெடெலா, “இளையராஜா சரிகம நிறுவனம் குறிப்பிடும் பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிப்பது சரேகாமா நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். எனவே, அந்த 134 படங்களில் இடம்பெற்றுள்ள இசை மற்றும் பாடல்களைப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு அனுமதி அளிக்கவோ இளையராஜாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.” என உத்தரவிட்டார்.

ஏற்கனவே ‘மூடுபனி’ படத்தின் “என் இனிய பொன் நிலவே” பாடல் தொடர்பான வழக்கிலும் நீதிமன்றம் சரிகம நிறுவனத்துக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

Source link