நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதன்பிறகு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட உள்ளது. பிறகு, இறுதியாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்.
இப்படி, 12 போட்டிகளில் ஆட முக்கிய காரணம், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தை லாபகரமானதாக மாற்றதான். இந்த 12 போட்டிகள் மூலம் மட்டும் நியூசிலாந்து அணிக்கு, சராசரியாக 54 கோடிகள் வரை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதில், பிசிசிஐக்கு எந்த லாபமும் கிடையாது.
ஐசிசி விதிமுறைப்படி, தொடரை நடத்தும் நாட்டிற்குதான் முழு தொகையும் சென்று சேரும். இதனால், நியூசிலாந்திற்கு சென்று, இந்தியா 12 போட்டிகளில் விளையாடுவது, அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத்தை நிதி நெருக்கடியில் இருந்து காக்கும் வகையில் இருக்கும்.
இப்படி, இந்திய அணியின் உதவி, நியூசிலாந்திற்கு பெரிய உதவியாக இருக்கும் நிலையில், நியூசிலாந்து அரசு செய்யும் செயல், இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது? நியூசிலாந்து நாட்டில், தற்போது ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலிஸ்தான் பிரிவினை இயக்கத்தினர், தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். குறிப்பாக, இந்திய அணி, நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு போராட்டம் தீவிரமடைய துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி, போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதனை நியூசிலாந்து அரசு கட்டுப்படுத்தவில்லை. கருத்து சுதந்திரம், பேச்சுரிமை எனக் கூறி, போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இதனால், கடும் அதிருப்தியடைந்துள்ள இந்திய ரசிகர்கள், நியூசிலாந்து சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, இந்தியா திரும்ப வேண்டும் என சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மத்திய அரசு இதனை ஏற்குமா? ரசிகர்களின் இந்த கோரிக்கையை, மத்திய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை. காரணம், மைதானத்திற்குள்ளும் சரி, போட்டி நடைபெறும் இடத்திலும் சரி, போராட்டக்களுக்கு நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும், இந்த போராட்டிற்கு அரசின் ஆதரவு இல்லை. பேச்சுரிமை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகதான், போராட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களில் அல்லது முன்னாள் வீரர்களில் யாரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால், இதனை மத்திய அரசு இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை.
இருப்பினும், இந்திய ரசிகர்கள், இந்த போராட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக அதிருப்தியை வெளிப்படுத்தும் பட்சத்தில், போட்டி நடைபெறும் இடங்களுக்கு, பாதுகாப்பை இன்னமும் அதிகரிப்பார்கள். மேலும், இந்திய வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். அதுமட்டுமல்ல, நிலைமை கவனித்து, அவ்வபோது நியூசிலாந்து அரசிடம், மத்திய உளவுத்துறையும் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் என்பதால், இந்த போராட்டத்தால், எந்த பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை.
இந்தியா, நியூசிலாந்து இடையில், இதுவரை ஒரு டி20 போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில், 226 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணி, 19.4 ஓவர்களில் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, 2ஆவது போட்டி, இன்று நடைபெறவுள்ளது. அடுத்து எஞ்சிய 3 டி20 போட்டிகளும், இதனைத் தொடர்ந்து, 5 ஒருநாள் போட்டிகளும், கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
