நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். இதில், முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி, அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறார்கள்.
பெரிய பார்ட்னர்ஷிப்: மூன்றாவது டி20 போட்டியில், 199 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், ஓபனர்களாக அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடர்ச்சியாக காட்டடி அடித்து அசத்தினார்கள். இதனால், இந்திய அணி, பவர் பிளேவிலேயே 118/0 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தது.
வரலாற்றில் முதல் முறை: ஒபனர்கள் அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி ஆகியோர் அபாரமாக செயல்பட்டு, 43 பந்தில் 133 ரன்களை குவித்து அசத்தினார்கள். குறிப்பாக, இந்த ரன்களை, 18.13 ரன்ரேட்டில் அடித்தார்கள். அதாவது, ஓவருக்கு சராசரியாக 18.13 ரன்களை அடித்து வியக்க வைத்தனர். உலக அளவில், டி20 கிரிக்கெட்டில், இதுதான் அதிரடியாக ஓபனிங் பார்ட்னர்ஷிப்பாக இருக்கிறது.
இதற்குமுன், 2025ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து ஓபனர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் 16.08 ரன்ரேட்டில், 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் சாதனையாக இருந்தது.
இறுதியில், வைபவ் சூர்யவன்ஷி 19 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 45 ரன்களை அடித்த நிலையில், அபிஷேக் சர்மா, 38 பந்தில் 9 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் உட்பட 113 ரன்களை அடித்து அவுட் ஆனார். இப்படி, இருவரும் அதிரடியாக துவக்கத்தை கொடுத்திருப்பதால், இந்திய அணியின் வெற்றி பிரகாசமாக மாறியுள்ளது.
நியூசிலாந்து இன்னிங்ஸ்: இப்போட்டியில், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 198/3 ரன்களை குவித்தது. ஓபனர் டிம் செய்பர்ட் 6 பந்தில் 2 ரன்களை அடித்து அவுட் ஆனப் பிறகு, பின் ஆலன் அபாரமாக செயல்பட்டு, 25 பந்தில் 5 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், டேரில் மிட்செலும் சிறப்பாக செயல்பட்டு, 52 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 89 ரன்களை குவித்தார்.
இறுதிக் கட்டத்தில், பிவோன் ஜாகப்ஸ் 23 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 39 ரன்களை அடித்தார்.
குறைந்த ஸ்கோர்: நியூசிலாந்து அணி, முதல் 10 ஓவர்களில் 100/2 என்ற நல்ல நிலையில் இருந்தது. இதனால், நியூசிலாந்து அணி, 220 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி நேரத்தில், டேரில் மிட்செல், பிவோன் ஜாகப்ஸ் ஆகியோரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. டெத் ஓவர்களில், 24 பநில் 42 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. மேலும், 14 மற்றும் 15 ஆகிய ஓவர்களில் 7, 4 என குறைந்த ரன்களைதான் அடித்தார்கள். இப்படி, கடைசி நேரத்தில் மிட்செல் மற்றும் ஜாகப்ஸ் ஆகியோர் சொதப்பியதால்தான், நியூசிலாந்து அணி பெரிய ரன்களை அடிக்காமல், கடைசி நேரத்தில் பின்னடைவை சந்தித்தது.
மைக்கேல் பிரேவிஸால் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்ட முடியும். ஆனால், அவரை களிமறக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
