நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கிறிஸ் சர்ச்சில் துவங்கிய முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
நியூசிலாந்து இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், ஓபனர்கள் டிம் செய்பர்ட் மற்றும் பின் ஆலன் ஆகியோர் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி அசத்தினார்கள். இந்த இருவரும், சமீப காலமாகவே தொடர்ச்சியாக மிரட்டலாக பேட்டிங் செய்து அசத்துகிறார்கள்.
இருவரும் இணைந்து, இதுவரை 20 டி20 போட்டிகளில் ஓபனர்களாக ஆடி, 11.28 ரன்ரேட்டில், 46.84 சராசரியில் 890 ரன்களை குவித்து அசத்தியுள்ளனர். சாம்சன், அபிஷேக் சர்மா பார்ட்னர்ஷிப் கூட, 11.16 ரன்ரேட்டில்தான் ஆடியிருக்கிறது.
இதனால், இம்முறை செய்பர்ட் மற்றும் ஆலன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், துவக்கத்தில், பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருந்ததால், இருவரும் அதிரடியான துவக்கத்தை கொடுக்கவில்லை. செய்பர்ட் 17 பந்தில் 24 ரன்களையும், பின் ஆலன் 24 பந்தில் 45 ரன்களையும் எடுத்து, ஓரளவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
இதனைத் தொடந்து, டேரில் மிட்செல் மூன்றாவது இடத்தில் ஆடி, 19 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 28 ரன்களை எடுத்து அவுட் ஆனார். பிறகு, கிளென் பிலிப்ஸ் மற்றும் பிவோன் ஜேகப்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக காட்டடி அடித்து ரன்களை குவித்தார்ள்.
இதில், பிவோன் ஜேகப்ஸ், 16 பந்தில் 3 சிக்ஸர்கள் உட்பட 31 ரன்களை குவித்த நிலையில், கிளென் பிலிப்ஸ் 40 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்களை குவித்தார். இப்படி, இருவரும் அதிரடியாக விளையாடியதால், நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 225/4 ரன்களை குவித்து அசத்தியது.
இந்திய அணியில், எந்த பௌலரும் சிறப்பாக பந்துவீசவில்லை. குறிப்பாக, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புவனேஷ்வர் குமாரும் சொதப்பினார். அனைத்து பௌலர்களும், 10 எகனாமியில்தான் பந்துவீசினார்கள். குறிப்பாக, புவனேஷ்வர் குமார், 4 ஓவர்களில் 49 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. அக்சர் படேல், 4 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டைதான் எடுத்தார்.
டேரில் மிட்செல் அபாரம்: நிதான ஆட்டத்திற்கு பேர்போன டேரில் மிட்சில், இப்போட்டியில், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து வியக்க வைத்தார். அக்சர் படேல் வீசிய 5.4ஆவது பந்தில், லாங் ஆன் திசையில் சிக்ஸரை பறக்கவிட்ட நிலையில், இதுவும் ஒரு சாதனையாக மாறியுள்ளது.
கடைசியாக 2018ஆம் ஆண்டில்தான், நியூசிலாந்து டி20 அணிக்காக, மூன்றாவது இடத்தில் ஆடிய பேட்டர், முதல் பந்திலேயே சிக்ஸரை அடித்து அசத்தினார். ஆக்லாந்தில் நடைபெற்ற அப்போட்டியில், ஆண்ட்ரை டைக்கு எதிராக, டிம் செய்பர்ட் சிக்ஸர் அடித்திருந்தார். அதன்பிறகு, தற்போதுதான், ஒரு ஒன்டவுன் பேட்டர், அந்த அணிக்காக, முதல் பந்திலேயே சிக்ஸரை அடித்துள்ளார்.
இந்திய அணி வெற்றி வாய்ப்பு: பிட்ச், பேட்டர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கிறது. இதனால், பவர் பிளேவில் 2 விக்கெட்களுக்கும் மேல் விக்கெட்டை கொடுக்காமல், 85+ ரன்களை அடித்தால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாணமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
