IND VS NZ 2வது டி20 போட்டி!. திலக் வர்மா அபாரம்!. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பவுலிங்கை தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் இஷான் கிஷனுக்கு பதில் வைபவ் சூர்யவன்சியும், மயங்க் யாதவுக்கு பதில் பிரின்ஸ் யாதவும் அணியில் இணைந்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 180 ரன்களை எடுத்தது. சைபர்ட்(7), பின் ஆலன் 16, மிட்செல் 6 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நியூசிலாந்துக்கு ஏமாற்றம் அளித்தனர். ஆனால் கடந்த போட்டியை போல பிலிப்ஸ் மற்றும் ஜாக்கப்ஸ் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த அதிர்ச்சி கொடுத்தனர். 100 ரன்களை கடப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.அபிஷேக் ஷர்மா 27, சஞ்சு சாம்சன் 14, சூர்யவன்சி 4, ஸ்ரேயஸ் ஐயர் 7 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சாண்ட்னர் வீசிய ஒரே ஓவரில் ஸ்ரேய்ஸ் ஐயர், அக்சர் படேல் அவுட்டாகினர். 12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதன்பிறகு நமன் தீர், நிதிஷ் ரெட்டி, திலக் வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். திலக் 26 பந்துகளில் 51 ரன்கள், நமன் தீர் 17 பந்துகளில் 31 ரன்கள், நிதிஷ் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தனர். இறுதியாக 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடரில் 2-0 என்ற கணக்கிலும் முன்னிலையில் உள்ளது.

ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 226 என்ற கடினமான இலக்கை சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நமன் திர் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் திறமையால் இந்திய அணி எளிதில் வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.