இலங்கை செல்லும் இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்கவுள்ளது.
இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், காயம் காரணமாக அவதிப்படும் வீரர்கள் குறித்து, அறிக்கை சமர்பிக்க, மருத்துவ குழுவினரிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், மருத்துவ குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி, வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்ற வாஷிங்டன் சுந்தரால், முதல் போட்டியில் விளையாட முடியாது என்றும், இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பதை முதல் போட்டி நடைபெறும் சமயத்தில்தான் உறுதியாக தெரிவிக்க முடியும் என மருத்துவ குழுவினர், பிசிசிஐயிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஜஸ்பரீத் பும்ராவுக்கு, ஜூலை 30ஆம் தேதி வரை முழு ஓய்வை அளித்துவிட்டு, அதன்பிறகு அவரது பிட்னஸை சோதித்து பார்க்க மருத்துவ குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனால், அணி அறிவிப்பு சற்று தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
மிக முக்கியமான தொடர்: இலங்கைக்கு எதிரான இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மிகமுக்கியமானதாக இருக்கிறது. காரணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் இருக்கிறது. இலங்கை அணி, 41.67 சதவீத புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும், இத்தொடர் மிக முக்கியமானதாக உள்ளது.
குறிப்பாக, இத்தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைக்க முடியும். இதனால், இத்தொடருக்கான இந்திய அணியை வலுவானதாக கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது. இதனால்தான், பிட்னஸுடன் இருக்கும் வீரர்கள் குறித்து, மருத்துவ குழுவினரிடம் பிசிசிஐ தகவல் கேட்டுள்ளது.
சொதப்பினால் காலி: ஒருவேளை, இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்விகளை சந்தித்தால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலைமை ஏற்படும். ஆகையால், இத்தொடரில் இந்திய டெஸ்ட் அணி சொதப்பி தோல்விகளை சந்தித்தால், அணியில் இடம்பெறும் சில வீரர்களை நிரந்தரமாக நீக்க வாய்ப்புள்ளது.
இதனால், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் மீது, பிசிசிஐ அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 15 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து, 2ஆவது போட்டி, ஆகஸ்ட் 23 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இரண்டு போட்டிகளும், இந்திய நேரப்படி, காலை 10 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, கல்லே மைதானத்திலும், இரண்டாவது போட்டி, கொழும்புவிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
