ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்ட, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்து மூன்றாவது போட்டி, துவங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பொறுமையாக ஆடிய சூர்யவன்ஷி: எப்போதும், முதல் பந்தில் இருந்தே காட்டடி அடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி, மூன்றாவது போட்டியில், துவக்கத்தில் நிதானமாக விளையாடினார். இதன்மூலம், சூர்யவன்ஷி, சதம் அடிப்பதற்காக, துவக்கத்தில் செட்டில் ஆக முடிவு செய்தது தெரிய வந்தது.
31 பந்தில்தான், சூர்யவன்ஷி அரை சதம் அடித்தார். இந்த 31 பந்துகளிலும், பந்தை தேவையில்லாமல், சூர்யவன்ஷி தூக்கியடிக்கவில்லை. பவுண்டரிகளை டார்கெட் செய்துதான் ஆடினார். பிறகு, சற்று அதிரடி காட்ட ஆரம்பித்த சூர்யவன்ஷி, இறுதியில் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 81 ரன்களை குவித்து அசத்தினார்.
சூர்யவன்ஷி வரலாற்று சாதனை: இப்போட்டியில், சூர்யவன்ஷி அபாரமாக செயல்பட்டு 81 ரன்களை அடித்ததன் மூலம், சூர்யவன்ஷி ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதாவது, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில், 16 வயது கூட நிரம்பாத ஒரு சர்வதேச அணி வீரர், இரண்டு முறை 50+ ரன்களை அடிப்பது இதுதான் முதல் முறை.
இந்திய அணி ஸ்கோர் விபரம்: முதலில் களமிறங்கிய இந்திய அணியில், வழக்கம்போல, அபிஷேக் சர்மா படுமோசமாக சொதப்பி, 4 பந்தில் 2 ரன்னைதான் அடித்தார். இத்தொடரின் மூன்று போட்டிகளிலும், முசரம்பானி பந்துவீச்சில்தான், அபிஷேக் சர்மா அவுட் ஆனார்.
அதன்பிறகு, இஷான் கிஷன் தொடர்ச்சியாக நிதானமாக விளையாடி சொதப்பினார். இவர், 26 பந்துகளை எதிர்கொண்டு, அதில் 4 பவுண்டரிகளை மட்டும் அடித்து, 29 ரன்னைதான் சேர்த்தார். மேலும், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் 18 பந்தில் 27 ரன்களை மட்டும் அடித்து அவுட் ஆன நிலையில், திலக் வர்மாவும் சிறப்பாக செயல்படவில்லை. 9 பந்துகளில் 11 ரன்னைதான் சேர்த்தார்.
இறுதிக் கட்டத்தில், ரிங்கு சிங், ஓரளவுக்கு அதிரடி காட்டி, 14 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 25 ரன்களை சேர்த்து அவுட் ஆனார். சூர்யவன்ஷி அதிரடி காட்டியப் பிறகு, மற்ற பேட்டர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தினால், இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 192/5 ரன்களை எடுத்தது. இது பெரிய ஸ்கோர்தான். இருப்பினும், 200+ ரன்களை எட்ட முடியவில்லை.
ஜிம்பாப்வே அணி, பௌலர் பிராட் எவன்ஸ் 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
முதல் இன்னிங்ஸில், இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 64 ரன்களை எடுத்து, ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. அடுத்து, 7 முதல் 15 ஓவர்கள் வரை, 81 ரன்களை அடித்து, 2 விக்கெட்களை இழந்தார்கள். பிறகு, கடைசி 4 ஓவர்களில் 47 ரன்களை அடித்து, 2 விக்கெட்களை இழந்தனர். அதாவது, பவர் பிளேவில் 10.66 ரன்ரேட்டில் ஆடிவிட்டு, பிறகு மிடில் ஓவர்களில் 7 முதல் 15ஆவது ஓவர் வரை 9 ரன் ரேட்டிலும், 16 முதல் 20 ஓவர்கள் வரை 9.4 ரன் ரேட்டிலும் ரன்களை அடித்தனர்.
