ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 13.2 ஓவர்களிலேயே வென்ற இந்திய அணி, தற்போது இரண்டாவது போட்டியில், முதலில் களமிறங்கி, 20 ஓவர்களில் 219/5 ரன்களை குவித்து அசத்தியது.
இந்திய அணி இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஓபனர்கள் சிறப்பாக செயல்படவில்லை. அபிஷேக் சர்மா, 8 பந்தில் 8 ரன்களை அடித்து அவுட் ஆன நிலையில், வைபவ் சூர்யவன்ஷி, 9 பந்தில் 20 ரன்னை சேர்த்து அவுட் ஆனார். இப்படி, ஓபனர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனப் பிறகு, இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஒருபக்கம், ஷ்ரேயஸ் ஐயர் நிதானம் காட்டிய நிலையில், மறுபக்கம் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ரன் மழை பொழிந்தார். ஷ்ரேயஸ் ஐயர், 20 பந்தில் 25 ரன்களை சேர்த்து அவுட் ஆனப் பிறகு, இஷான் கிஷன், 44 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 81 ரன்களை குவித்து அசத்தினார்.
இறுதிக் கட்டத்தில், திலக் வர்மாவும் சிறப்பாக செயல்பட்டு, 29 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 60 ரன்களை எடுத்து, கடைசி நேரத்தில் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். மேலும், ரிங்கு சிங் 12 (8), ஷிவம் துபே 6 (3) ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை அடித்ததால், இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 219/5 ரன்களை குவித்தது.
வரலாற்று சாதனை: இந்திய அணி, இந்த வருடத்தில், இதுவரை மட்டும் 9 முறை 200+ ரன்களை அடித்துள்ளது. 2024ஆம் ஆண்டிலும், 9 முறை 200+ ரன்களை அடித்திருந்தது. இந்த வருடத்தில், இன்னமும் ஒருமுறை 200+ ரன்களை அடித்தால், 10 முறை 200+ ரன்களை அடித்து, முதல் முறையாக, ஒரு வருடத்தில் 10 முறை 200+ ரன்களை அடித்த முதல் அணியாக இந்திய அணி சாதனை படைக்கும். ஆஸ்திரேலிய அணி, 2025ஆம் ஆண்டில் 7 முறை 200+ ரன்களை அடித்து 2ஆவது இடத்தில் இருக்கிறது.
ஜப்பான் அணியும், 2024ஆம் ஆண்டில் 7 முறை 200+ ரன்களை அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள், ஒரு வருடத்தில் 6 முறை 200+ ரன்களை அடித்து, மூன்றாவது இடங்களில் இருக்கிறது.
சர்வதேச டி20 பார்மெட்டில், இந்திய அணி, இதுவரை 52 முறை 200+ ரன்களை அடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி, 29 முறை மட்டுமே 200+ ரன்களை எடுத்துள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்றாவது முறையாக 200+ ரன்களை இந்திய அணி அடித்துள்ளது. டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், சென்னையில் நடைபெற்ற போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 256/4 ரன்களை அடித்தனர். 2024ஆம் ஆண்டில், ஹராரே மைதானத்தில் 243/2 ரன்களை அடித்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 200+ ரன்களை அடித்துள்ளனர்.
பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருப்பதால், ஜிம்பாப்வே அணியும், வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
