ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு, நேற்று (புதன்கிழமை) மத்திய பெய்ரூட்டில் உள்ள பரபரப்பான வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் முன் அறிவிப்பின்றி நடத்தப்பட்டன.
இதில் குறைந்தது 182 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் லெபனான் கூறியது. இது, சமீபத்திய இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போரில் மிகவும் மோசமான உயிரிழப்புகள் நிகழ்ந்த நாளாகும்.
லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவின் காரணமாகவே லெபனான் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பி.பி.எஸ். நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்கள் குறித்து கேட்டபோது, “அது ஒரு தனிப்பட்ட மோதல்” என்று அவர் கூறினார். ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவுடனான தனது போருக்கு இந்த ஒப்பந்தம் பொருந்தாது என்று இஸ்ரேல் கூறியிருந்த போதிலும், ஈரானும் மத்தியஸ்த நாடான பாகிஸ்தானும் அது பொருந்தும் என்று கூறியுள்ளன.
போர்நிறுத்த அறிவிப்புக்கு பிறகு லெபனான் மக்களிடையே ஏற்பட்ட தற்காலிக நிம்மதி உணர்வு, இஸ்ரேலிய இராணுவம் தற்போதைய போரில் நடத்திய மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதல் என்று கூறியதால் பீதியாக மாறியது. அந்த தாக்குதலில் பெய்ரூட், தெற்கு லெபனான் மற்றும் கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் 10 நிமிடங்களுக்குள் 100-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
போரினால் இடம்பெயர்ந்த ஏராளமான மக்கள் தஞ்சம் புகுந்திருந்த பெய்ரூட்டின் பல பகுதிகளில், கரும்புகை வானுயரச் சூழ்ந்திருந்தது. அதுவரை பரபரப்பாகவும், நீல வானத்துடனும் இருந்த அந்த மதிய வேளையில், வெடிப்புகள் வாகனங்களின் ஒலிப்பான் சத்தத்தை இடைமறித்தன. அடுக்குமாடிக் கட்டிடங்கள் தாக்கப்பட்டன.
வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகள் கலந்த மத்திய கார்னிச் அல் மஸ்ரா சுற்றுப்புறத்தில், பெய்ரூட்டின் மிகவும் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றில், வாகனங்களிலும் தரையிலும் கருகிய நிலையில் உடல்களை கண்டதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். ஃபோர்க்லிஃப்ட்களை பயன்படுத்தி, மீட்புப் பணியாளர்கள் புகைந்துகொண்டிருந்த இடிபாடுகளை அகற்றி, உயிர் பிழைத்தவர்களைத் தேடி இடிபாடுகளைச் சல்லடை போட்டனர்.
தாக்குதல்கள் நடந்த முதல் இரண்டு மணி நேரத்தில், இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா தாக்குதல்களை தொடுத்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. லெபனான் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை மீண்டும் நிறுத்துவதாக ஈரான் அறிவித்ததாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
