வருமான வரி செலுத்துவோருக்கு இது முக்கியமான காலம். வரி செலுத்துவோருக்காக ஆன்லைன் படிவங்கள் மற்றும் ஆஃப்லைன் எக்செல் (Excel) பயன்பாட்டுக் கருவியை வருமான வரித் துறை வெளியிட்டிருந்தது. தாமதக் கட்டணம் எதுவும் இல்லாமல் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2026 ஆகஸ்ட் 31 ஆகும். உங்களுடைய வருமானம் வரி வரம்புக்குள் வந்தாலோ அல்லது உங்கள் நிதி ஆவணங்களை முறைப்படுத்த விரும்பினாலோ, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது ஒரு முக்கியமான கடமையாகும்.
2025-26 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) ITR-1 முதல் ITR-7 வரையிலான அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் படிவங்களையும் வருமான வரித் துறை பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, அபராதம் அல்லது தாமதக் கட்டணம் எதுவும் இல்லாமல் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆகும். கடைசி நாட்களில் இணையதளத்தில் ஏற்படும் அதிகப்படியான நெரிசல் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க, முன்கூட்டியே வரிக் கணக்கைத் தாக்கல் செய்யுமாறு வரி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். கடைசி நேரப் பதற்றம் மற்றும் தவறுகளைத் தவிர்க்க, சரியான படிவத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் மின்னணு சரிபார்ப்பு (e-verification) வரை உள்ள முழுமையான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதல் முறையாக வரி செலுத்துபவர்களுக்குப் பல கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கும். அப்படிப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான விளக்கங்களை இங்கே பார்க்கலாம்.
யாருக்கெல்லாம் ITR தாக்கல் செய்வது அவசியம்?
பொதுவாக, உங்கள் மொத்த ஆண்டு வருமானம் அடிப்படை வரி விலக்கு வரம்பை விட அதிகமாக இருந்தால் நீங்கள் சட்டப்படி வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இருப்பினும், ITR தாக்கல் செய்வது அவசியமான வேறு சில சூழல்களும் உள்ளன. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உங்களுக்கு அசையாச் சொத்து (நிலம், வீடு போன்றவை) இருந்தால்; பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ESOP (Employee Stock Option Plan) திட்டத்தில் முதலீடு செய்திருந்தால்; உங்கள் நடப்புக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் ரொக்க வைப்புத்தொகை இருந்தால்; உங்கள் ஆண்டு மின்சாரக் கட்டணம் ரூ. 1 லட்சத்திற்கு மேல் இருந்தால்; ஒரு ஆண்டில் வெளிநாட்டுப் பயணத்திற்காக ரூ. 2 லட்சத்திற்கு மேல் செலவு செய்திருந்தால்; உங்கள் தொழில் அல்லது வணிகத்தின் மொத்த விற்பனை/வருவாய் (turnover) ரூ. 60 லட்சத்திற்கு மேல் இருந்தால்.
சரியான வரி முறையைத் தேர்ந்தெடுத்தல்!
சம்பளம், வங்கி ஃபிக்சட் டெபாசிட் (FD) மீதான வட்டி, பங்கு ஆதாயம் (dividend), வீட்டு வாடகை மற்றும் பிற வழிகளில் கிடைக்கும் வருமானங்களை ஒன்றுகூட்டி, அதிலிருந்து நீங்கள் செய்த முதலீடுகளைக் கழிப்பதன் மூலம் உங்கள் மொத்த வரிக்குரிய வருமானம் கணக்கிடப்படுகிறது.
பழைய வரி முறை!
PPF, NPS, ஆயுள் காப்பீடு, வீட்டுக் கடன் வட்டி மற்றும் குழந்தைகளின் கல்விக் கட்டணம் போன்ற திட்டங்களில் நீங்கள் பெரிய அளவில் முதலீடு செய்திருந்து, வரி விலக்கு கோர விரும்பினால் பழைய வரி முறை உங்களுக்குச் சிறந்ததாக இருக்கலாம்.
புதிய வரி முறை!
வரி சேமிப்பு முதலீடுகள் எதையும் செய்யாத நிலையில் குறைந்த வரி விகிதத்தின் பலனைப் பெற விரும்பினால் புதிய வரி முறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சரியான முடிவை எடுக்க நீங்கள் ஆன்லைன் வரி கால்குலெட்டரைப் பயன்படுத்தலாம்.
வரித் தாக்கல் செய்வதற்கு முன் இருக்க வேண்டிய ஆவணங்கள்!
முதல் முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது ஏற்படும் ஆவணச் சிக்கல்கள் அல்லது தாமதங்களைத் தவிர்க்க, தேவையான ஆவணங்களை முன்கூட்டியே கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த அத்தியாவசிய ஆவணங்களின் பட்டியல் இதோ..
அடையாள அட்டை: பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு (பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்).
வருமானச் சான்று: நிறுவனம் (employer) வழங்கும் ‘படிவம் 16’ (Form 16). ஆண்டின் இடையில் வேலையை மாற்றியிருந்தால், பழைய மற்றும் புதிய நிறுவனங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் படிவம் 16-ஐப் பெறுவது அவசியம்.
நிதி விவரங்கள்: வங்கிக் கணக்கு புத்தகங்கள் அல்லது கணக்கு அறிக்கைகள் (statements), வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ்கள் மற்றும் முதலீட்டு ரசீதுகள்.
AIS மற்றும் படிவம் 26AS: ITR இணையதளத்திற்குச் சென்று உங்கள் வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) மற்றும் படிவம் 26AS-ஐப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இவற்றில் உங்கள் வங்கி வட்டி, பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட TDS குறித்த முழுமையான டிஜிட்டல் தகவல்கள் அடங்கியிருக்கும். இது தரவுகளைச் சரிபார்த்து ஒப்பிடுவதை எளிதாக்கும்.
உங்கள் வருமானத்திற்கு ஏற்ற சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்!
தவறான ITR படிவத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வருமான வரி கணக்கை ‘குறைபாடுடையது’ (defective) என அறிவிக்க வழிவகுக்கலாம். எனவே, சரியான படிவத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். படிவத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் குழப்பம் அல்லது சந்தேகம் இருந்தால், இணையதளத்தில் உள்ள ‘Help Me Decide’ என்ற விருப்பத்தைப் பயன்படுத்தலாம். பல்வேறு படிவங்கள் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன…
ITR1 (Sahaj): சம்பளம், ஒரு வீடு மற்றும் வட்டி போன்ற பிற ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானம் ரூ.50 லட்சம் வரை உள்ள சம்பளம் பெறும் குடிமக்களுக்கானது.
ITR2: பங்குகள் அல்லது சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயம் (capital gains) அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வருமானம் இருந்தால் இதைப் பயன்படுத்தலாம்.
ITR3: வணிகம், கூட்டாண்மை நிறுவனம் அல்லது சுய தொழில் மூலம் வருமானம் இருந்தால் இதைப் பயன்படுத்தலாம்.
ITR4 (Sugam): ‘ஊக வரி விதிப்புத் திட்டத்தின்’ (Presumptive Taxation Scheme) கீழ் கணக்கு தாக்கல் செய்யும் சிறு வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கானது.
30 நாட்களுக்குள் மின்னணு சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்!
பல வரி செலுத்துவோர் படிவத்தைச் சமர்ப்பித்ததுடன் தங்கள் பணி முடிந்துவிட்டதாகக் கருதுகின்றனர். ஆனால் அப்படி இல்லை. வருமான வரித் தாக்கலை உறுதிப்படுத்த, அதைச் சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் மின்னணு சரிபார்ப்பு அவசியம். கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி மின்னணு சரிபார்ப்பைச் செய்யலாம். ஆன்லைன் முறையில் சரிபார்க்க ஆதார் OTP, நெட் பேங்கிங் அல்லது மின்னணு சரிபார்ப்புக் குறியீடு (EVC) ஆகியவற்றைப் பயன்படுத்தி சில நிமிடங்களிலேயே ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
ஆன்லைனில் சரிபார்க்க முடியவில்லை என்றால், ITR-V படிவத்தை அச்சிட்டு அதில் கையொப்பமிட்டு, வருமான வரித்துறையின் பெங்களூருவில் உள்ள CPC-க்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்ப வேண்டும். இந்தப் படிவமும் 30 நாட்களுக்குள் அங்கு சென்றடைய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
