Jio Platforms IPO,ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ: இரண்டாம் நாளிலும் சிறப்பான வரவேற்பு – jio platforms ipo update retail quota fully subscribed today

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் 3.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபிஓவுக்கான (IPO) பொதுமக்களின் பங்களிப்பு இன்று இரண்டாம் நாளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பங்குச்சந்தை தரவுகளின்படி, மொத்தப் பங்குகளை விட 3.47 மடங்கு அதிகமான ஆர்டர்கள் குவிந்துள்ளன. இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓவாகவும், கடந்த 20 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியாகும் முதல் ஐபிஓவாகவும் இது உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தை வெறும் எண்ணெய் மற்றும் ரசாயனத் துறை சார்ந்த ஜாம்பவானாக மட்டுமில்லாமல் நுகர்வோர், சில்லறை வணிகம் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் மிகப் பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற முகேஷ் அம்பானியின் நீண்டகால லட்சியத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த ஐபிஓ பார்க்கப்படுகிறது.

இந்த ஐபிஓவில் நிறுவன முதலீட்டாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. தகுதியான நிறுவன முதலீட்டாளர்கள் (QIBs) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை விட 9.42 மடங்கு அதிகமாக ஏலம் எடுத்துள்ளனர் என்று பங்குச்சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. சில்லறை முதலீட்டாளர்களுக்கு சுமார் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் நாளின் முதல் இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே அவர்கள் தங்களுக்குரிய பங்கை முழுமையாக நிரப்பியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் இந்த ஐபிஓ இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு நிஃப்டி பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டும் இதனால் லாபமடையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஜியோவில் தனது பெரும்பான்மைப் பங்குகளின் மதிப்பு குறித்த தெளிவு மற்றும் ஹோல்டிங்-கம்பெனி தள்ளுபடி குறைய வாய்ப்புள்ளதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பயனடையலாம். அதேசமயம், உயர்வான டெலிகாம் கட்டணங்கள் மற்றும் மேம்பட்ட துறை லாபத்தின் மூலம் ஏர்டெல் லாபம் பெறும் என்கின்றனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸைப் பொறுத்தவரை, ஜியோவின் பங்குச்சந்தை வெளியீடு அதன் மிக மதிப்புமிக்க வணிகங்களில் ஒன்றுக்கு தெளிவான மதிப்பீட்டு அளவுகோலை வழங்கும். மேலும், ஒட்டுமொத்த கூட்டு நிறுவனத்தின் சந்தை மதிப்பை மறுபரிசீலனை செய்ய இது உதவும். ஐபிஓ-க்கு முன்பு ஜியோ பிளாட்பார்ம்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 66.43 சதவீதப் பங்குகளை வைத்திருந்தது. மேலும் புதிய பங்கு வெளியீட்டிற்குப் பிறகு அது தோராயமாக 64.5 சதவீதப் பங்குகளைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ஜியோ பிளாட்பார்ம்ஸின் ஐபிஓக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ. 30,213 கோடி மதிப்பிலான இந்த பொதுப் பங்கு வெளியீடு தொடங்கிய 100 நிமிடங்களுக்குள் முழுமையாகப் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது. இதன் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் இந்த மைல்கல்லை எட்டிய இந்தியாவின் முதல் ஐபிஓ என்ற சாதனையைப் படைத்துள்ளது. முதல் நாளிலேயே இந்த பொதுப் பங்கு வெளியீடு 3.01 மடங்கு அதிகமாகப் பெற்றது. விற்பனைக்கு வைக்கப்பட்ட 19.75 கோடி பங்குகளுக்கு எதிராக, 59.44 கோடி பங்குகளுக்கான ஏலம் பெறப்பட்டது.

எல்.ஐ.சி, பிளாக்ராக் மற்றும் ஃபிடிலிட்டி உள்ளிட்ட 212 ஆங்கர் முதலீட்டாளர் கணக்குகள் மற்றும் திட்டங்களுக்கு ஜியோ நிறுவனம் முன்னதாகவே ரூ. 8,110 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link