Johnny Depp: ஜாக் ஸ்பேரோவின் திடீர் என்ட்ரி; மகிழ்ச்சியில் ஆழ்ந்த குழந்தைகள்.. நெகிழவைத்த ஜானி டெப்

Johnny Depp குழந்தைகளுடன் சிரித்து மகிழும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Johnny Depp

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர் ஜானி டெப், ஸ்பெயினில் உள்ள நினோ ஜீசஸ் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று புற்றுநோய் மற்றும் பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தற்போது அவர் நடித்துவரும் டே ட்ரின்கர் படத்தின் படபிடிப்புக்காக ஸ்பெயினில் தங்கியிருக்கும் அவர், அவரது பிரபலமான கதாப்பாத்திரமான கேப்டன் ஜாக் ஸ்பாரோ போல உடை அணிந்து சென்றுள்ளார்.

62 வயதாகும் அவர் குழந்தைகளுடன் சிரித்து மகிழும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஜானி டெப், கேப்டன் ஜாக் ஸ்பேரோவாக மாறி, மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளை மகிழ்விப்பது இதுமுதன்முறை அல்ல. வான்கூவர், பாரிஸ், லண்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் முதல் அமெரிக்காவின் பல நகரங்கள் வரை உலகம் முழுவதும் பலமுறை இதைச் செய்துள்ளார்.

“சில நேரங்களில் நான் குழந்தைகள் மருத்துவமனை போன்ற இடங்களுக்குச் செல்வேன். பல்வேறு வார்டுகளில் குழந்தைகளை ஆச்சரியப்படுத்துவேன். அது இரண்டு, மூன்று மணிநேரம் நீடிக்கும்… மிகவும் வேடிக்கையானதாக இருக்கும். அதற்காகவே நான் ஜாக் ஸ்பேரோவாக பயணிக்கிறேன்” என 2013ம் ஆண்டு அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார் ஜானி டெப்.

Johnny Depp
Johnny Depp

2003ம் ஆண்டு முதல் பைரட் ஆஃப் தி கரீபியன் படத்தில் நடித்தார் ஜானி டெப். அதன்பிறகு 2017 வரை 5 படங்கள் அதே கதையுலகில் வெளியாகி சிறப்பான பென்டாலஜியாக உருவானது.

பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் 6-ல் Johnny Depp?

ஜானி டெப் பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் சீரிஸுக்கு திரும்ப வேண்டுமென்பது உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது.

ஆனால் ஆம்பர் ஹெட் உடனான நீதிமன்ற போராட்டத்தின்போது டிஸ்னி ஜானி டெப்-ஐ தங்கள் தயாரிப்புகளிலிருந்து நீக்கியதால் அவர் மீண்டும் டிஸ்னியுடன் இணைவாரா என்பது பெரும் கேள்விக்குறியாகதான் இருக்கிறது.

சமீபத்தில் அடுத்த பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தை தயாரிக்க இரண்டு கதைகளை உருவாக்கி வருவதாக தயாரிப்பாளர் ஜெர்ரி ப்ரூக்ஹைமெர் தெரிவித்துள்ளார். இதனால் ஜானி டெப் திரும்புவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Source link