பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை தபால் துறை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம். கிசான் விகாஸ் பத்ரா என்பது இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறு சேமிப்புச் சான்றிதழ் திட்டமாகும். தொடக்கத்தில், இத்திட்டத்தின் முதிவுக் காலம் 5 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களாக இருந்ததுடன், முதலீடு செய்யப்படும் தொகை முதிவுக் காலத்தில் இரட்டிப்பாக்கப்பட்டது. இருப்பினும், இத்திட்டத்தின் பிரபலத்தைக் கருத்தில் கொண்டும், சிறு சேமிப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்தோடும், மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை 2014 ஆம் ஆண்டு இத்திட்டத்தை புதுப்பித்தது.
இத்திட்டத்தின் கீழ் தபால் நிலையத்தில் பல்வேறு தொகைகளில் வரம்பற்ற சான்றிதழ்களை வாங்கலாம். இந்தச் சான்றிதழ்களை எந்தவொரு முதியவரும் தனக்காகவோ அல்லது ஒரு சிறுவரின் பெயரிலோ வாங்கலாம். மேலும், இருவர் இணைந்து கூட்டுக்கணக்காகவும் வாங்க முடியும். இதில் மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளன. ஒற்றை நபர் கணக்கை எந்தவொரு பெரியவரும் தனக்காகவோ, சிறுவரின் சார்பாகவோ அல்லது 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவரோ தன்னிச்சையாகத் தொடங்கலாம். அதேபோல, கூட்டுக் கணக்கு வகை A பிரிவு கணக்கை அதிகபட்சமாக மூன்று பெரியவர்கள் இணைந்து தொடங்கலாம். இதில் முதிர்வுத் தொகை கணக்கில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பபடும்.
கடைசியாக, கூட்டுக் கணக்கு வகை B கணக்கையும் மூன்று பெரியவர்கள் இணைந்து தொடங்கலாம். ஆனால் முதிர்வுத் தொகை உறுப்பினர்களில் எவரேனும் ஒருவருக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ‘கிசான் விகாஸ் பத்ரா’ (விவசாயிகளுக்கான விகாஸ் பத்ரா) என்று பெயர் இருந்தாலும் இது விவசாயிகளுக்கு மட்டுமே உரியதல்ல; இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு குடிமகனும் இத்திட்டத்தில் முதலீடு செய்து பலன் பெறலாம். பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் சார்பாகவோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகவோ முதலீடு செய்யலாம். ஒரு சிறுவர் தன் பெயரில் சான்றிதழை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 10 ஆண்டுகள் ஆகும்.
இத்திட்டம் ஆண்டுக்கு 7.5 சதவீதம் கூட்டு வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீங்கள் முதலீடு செய்யும் தொகை 115 மாதங்களில் (அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள்) இரட்டிப்பாகும். இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகைக்கு எத்தகைய உச்சவரம்பும் இல்லை. கிசான் விகாஸ் பத்ரா திட்டம் சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகள் (30 மாதங்கள்) கட்டாய முடக்கப்பட்ட காலத்தைக் கொண்டுள்ளது. முதலீட்டாளர்கள் இந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பு பணத்தை எடுக்க முடியாது. இது முதலீடு செய்யப்பட்ட மூலதனம் தொடர்ந்து வட்டியுடன் வளர்வதை உறுதி செய்கிறது.
ஒரு நபர் இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 1,000 முதலீடு செய்து தொடங்கலாம் (இதற்கு குறைவாக முதலீடு செய்ய முடியாது). மேலும் ரூ. 100-ன் மடங்குகளில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செலுத்தலாம். இருப்பினும், அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு எதுவும் இல்லை. கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 115 மாதங்கள் முழு முதிர்வடைந்த பிறகு முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம். அவசரமாகப் பணத்தை எடுக்க வேண்டுமென்றாலும், 30 மாதங்கள் முடக்கப்பட்ட காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்பாக வைக்கப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். கணக்கு வைத்திருப்பவரின் இறப்பு, கடன் பெறப்பட்டு கணக்கு முடக்கம் செய்யப்படுவது அல்லது நீதிமன்றத்தின் நேரடி உத்தரவு போன்ற அவசர காலங்களில் மட்டுமே கணக்கு முதிர்வுக்கு முன்பே முடிக்கப்படும்.
பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு கிசான் விகாஸ் பத்ரா திட்டம் அரசின் ஆதரவு பெற்ற ஒரு சிறந்த நீண்டகால சேமிப்புத் திட்டமாக இருக்கும்.
