அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் சிலிண்டரை பதுக்குவதை தடுக்க வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியான எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் ஹோட்டல் துறை கடுமையாக பாதித்து இருக்கிறது. இதுபோன்ற நிலை தமிழ்நாட்டின் சிலப் பகுதிகளில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
