‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர்.
இந்தப் படங்களின் வெற்றி அடுத்தடுத்த படவாய்ப்புகளை உருவாக்கித் தர, பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
தற்போது அவரது நடிப்பில் ‘டகாய்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர் தன்னுடைய படத்தேர்வு குறித்து பேசியிருக்கிறார்.
“பெரிய இயக்குநர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் தரும் ஆஃபர்கள் மிகவும் நன்றாக இருக்கும்.
ஆனால் சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், கனத்த இதயத்துடன் நான் வேண்டாம் என்றே சொல்லி விடுவேன்.

‘சீதா ராமம்’ படத்தின் சீதா மகாலட்சுமி, ஹாய் நானாவின் ‘யஷ்னா’ ஆகிய கதாபாத்திரங்கள் என் திரைப்பயணத்தின் மைல்கற்கள்.
பேராசை பெரு நஷ்டம் என்பார்கள். அதனால்தான், வாய்ப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எனக்கு ஏற்ற சரியான படத்தைத் தேர்வு செய்யவே விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
