நேற்று ஈடன் கார்டன்-ல் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,நியூசிலாந்து அணி 170 என்ற ஸ்கோரை 13 வது ஓவரிலேயே அடைந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதுவரை தோல்வியே சந்திக்காமல் இருந்த தென்னாப்பிரிக்கா அணி செமி பைனலில் ஏற்பட்ட இந்த தோல்வியால் தொடரிலிருந்தே வெளியேறியது. இதனால் T20 உலகக் கோப்பை மீண்டும் ஒரு எட்டாத கனியாகவே மாறியுள்ளது அந்த அணிக்கு.

தோல்விக்கு பின்னர் தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம், “அவர்கள் ஆரம்ப ஓவர்களில் மிகவும் நன்றாக பந்து வீசினர். பந்து சரியாக பேட்டுக்கு வரவில்லை. சில பந்துகள் மந்தமாக நின்று வந்தது; அதனால் ரன்கள் எடுக்க மிகவும் கடினமாகியது. அந்த அழுத்தத்தில் விக்கெட்டுகள் விழுந்தது. எனவே அவர்களின் பந்து வீச்சு அணிக்கு பாராட்டு கொடுக்க வேண்டும்.
பேட்டிங்கிலும், யாராவது ஒருவர் ஃபின் அலென் போன்ற பெரிய இன்னிங்ஸ் விளையாடினால், ஃபீல்டிங் அணி போட்டியில் இருந்து நழுவி விடும். 170 ரன்கள் அடைந்தது நல்ல முயற்சிதான். இந்த இலக்குதான் நாங்கள் இன்னும் போட்டியில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை வைத்திருந்தது. ஆனால் T20 கிரிக்கெட் பொறுத்தவரை, பவர் பிளே ஓவர்களை எந்த அணி சரியாக பயன்படுத்துகிறார்களோ அவர்கள் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவர். அதேபோல்தான் நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆடினார்கள்.
ஃபின் அலெனின் இன்னிங்ஸுக்கும், டிம் செய்ஃபர்டின் இன்னிங்ஸுக்கும் பெரிய பாராட்டு. அவர்கள் ஆரம்பத்திலேயே போட்டியை எங்களிடமிருந்து பறித்துவிட்டார்கள். இன்று எங்களுக்கு ஒரு மோசமான நாள் தான்.
எப்படியாவது 190 வரை கொண்டு சென்றிருந்தால், போட்டியில் இருந்திருக்கலாம். இதைப் பற்றி குழுவாக ஆய்வு செய்வோம். முடிவால் நிச்சயமாக ஏமாற்றம். ஆனால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்த அணியைப் பற்றி பெருமை உள்ளது. இது ஒரு துரதிர்ஷ்டமான இரவு மட்டுமே.
அணியாகவும், தனிநபர்களாகவும் முன்னேற முயற்சிப்போம். அது எதிர்காலத்தில் நமக்கு நல்ல பலன் தரும்.
மீண்டும் சொல்கிறேன், மிகுந்த ஏமாற்றம். ஆனால் அதனால் நாங்கள் இன்னும் வலிமையாகி, அடுத்த முறையில் சிறப்பாக திரும்புவோம்.” என்றார்.
