உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை ஆதார் கார்டுடன் மிக எளிதாக இணைப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இணைக்கும்போது நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!
போக்குவரத்துச் சேவைகளை வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்குச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமும் மாநில அரசுகளும் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ‘பரிவஹன்’ (Parivahan) இணையதளத்தில் உங்கள் ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவற்றுடன் ஆதார் அட்டையை இணைப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போலி அல்லது நகல் ஓட்டுநர் உரிமங்களை ஒழிப்பதற்கும், வாகன உரிமையாளர்கள் RTO அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே ‘தொடர்பு இல்லா’ (contactless) eKYC சேவைகளைப் பெறுவதற்கும் ஏதுவாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. புதிய விதிகளின்படி, ஜூலை 15ஆம் தேதி முதல், ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் வாகன உரிமையாளர் மாற்றம் மற்றும் பிற மாநிலங்களுக்கு வாகனத்தை மாற்றுவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமத்தை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான வழிமுறை!
முதலில் ‘பரிவஹன் சேவா’ (Parivahan Seva) இணையதளத்திற்குச் சென்று ‘சாரதி’ (Sarathi) போர்டல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Services on Driving Licence ‘ என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
உங்கள் ஓட்டுநர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, ‘Get DL Details’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
அடையாளச் சரிபார்ப்பிற்காக ‘Aadhaar Authentication’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, ‘Generate OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த OTP நம்பரை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த செயல்முறை முடிந்ததும் உங்கள் ஓட்டுநர் உரிமம் உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்படும்.
வாகனப் பதிவுச் சான்றிதழை (RC) ஆதாருடன் இணைப்பதற்கான செயல்முறை!
முதலில் ‘வாஹன் சிட்டிசன் சர்வீசஸ்’ (Vahan Citizen Services) இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
உங்கள் மாநிலம் மற்றும் உள்ளூர் RTO அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்து ‘Services’ அல்லது ‘Update Mobile Number/Aadhaar’ பகுதிக்குச் செல்ல வேண்டும்.
வாகனப் பதிவு எண், சேஸ் எண் மற்றும் இன்ஜின் எண் போன்ற உங்கள் வாகன விவரங்களை உள்ளிட வேண்டும்.
சரிபார்ப்பு முறையாக ‘Aadhaar Authentication’-என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, உங்கள் மொபைலுக்கு வந்த OTP நம்பரை உள்ளிடுவதன் மூலம் சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.
ஆதாருடன் இணைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
பெயர் சரியாகப் பொருந்த வேண்டும்: உங்கள் ஓட்டுநர் உரிமம் அல்லது RC-யில் உள்ள பெயர், உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் சரியாகப் பொருந்த வேண்டும். இவ்விரு விவரங்களுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு அல்லது வேறுபாடு இருந்தால் ஆன்லைன் இணைப்புச் செயல்முறை நிறுத்தப்படும்.
மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்: ஆதார் சரிபார்ப்பு OTP அடிப்படையிலானது மட்டுமே. எனவே, உங்கள் தற்போதைய மொபைல் எண் UIDAI மூலம் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
முரண்பாடு இருந்தால் என்ன செய்வது?
ஆதார் விவரங்களுக்கும் போக்குவரத்துத் துறை இணையதளத்தில் உள்ள தரவுகளுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு கண்டறியப்பட்டால் விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிம விவரங்களை வழங்குவதன் மூலம் செயல்முறையைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், RC மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகிய இரண்டின் விவரங்களிலும் முரண்பாடு இருந்தால் விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட RTO அலுவலகத்திற்குச் சென்று நேரடிச் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
Source link
