PM Kisan Deposit Date,பிஎம் கிசான்: அக்கவுண்டில் விழும் 2,000 ரூபாய் – அக்டோபர் 30 ரெடியா இருங்க – pm modi to release 24th installment amounts under pm kisan scheme on october 30

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி ( பிஎம் கிசான் ) திட்டத்தின் 24ஆவது தவணையை அக்டோபர் 30ஆம் தேதியன்று மத்திய அரசு விடுவிக்கிறது. குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் குஜராத்திற்கு வருகை தரவுள்ளார். பில்தியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியின் போது, நாடு முழுவதும் உள்ள 9.34 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு 18,680 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை பிரதமர் வழங்கவுள்ளார்.

பிஎம் கிசான் திட்டம் என்றால் என்ன?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை தலா ரூ. 2,000 வீதம் மூன்று சம தவணைகளாக நேரடியாகப் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.

யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும்?

2019ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த பிஎம் கிசான் திட்டம், உலகின் மிகப்பெரிய நேரடிப் பலன் பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. தங்கள் பெயரில் சாகுபடி செய்யக்கூடிய நிலங்களைக் கொண்டுள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாயக் குடும்பங்களும் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இருப்பினும், நிறுவன நில உரிமையாளர்கள் மற்றும் அரசியலமைப்புப் பதவிகளை வகிப்பவர்கள் அல்லது வகித்தவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் அல்லது மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட விவசாயக் குடும்பங்கள் இதில் விலக்களிக்கப்பட்டுள்ளன.

பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் (சில விதிவிலக்குகளைத் தவிர), மாத ஓய்வூதியமாக ரூ. 10,000 அல்லது அதற்கு மேல் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் தொழில்முறை அமைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் போன்ற வல்லுநர்களும் இத்திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்.

பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

சரியான நேரத்தில் பணம் பெற நீங்கள் தற்போதைய அரசு விதிகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும். வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தங்களின் இ-கேஒய்சி (e-KYC) செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளது. மேலும், விவசாயியின் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இ-கேஒய்சி செயல்முறை அல்லது ஆதார் இணைப்பை முடிக்கத் தவறும் விவசாயிகள், பயனாளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதுடன் வரவிருக்கும் தவணைத் தொகையான 2,000 ரூபாயைப் பெற மாட்டார்கள். எனவே, தவணைத் தொகை வழங்குவதற்கு முன்பு உங்கள் நிலையைச் சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.

விவசாயிகள் கவனிக்க வேண்டியது!

அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஒரு முறை கடவுச்சொல்லைப் (OTP) பயன்படுத்தியோ, முக அடையாளத்தைப் பயன்படுத்தி பிஎம் கிசான் மொபைல் செயலி மூலமாகவோ அல்லது அருகில் உள்ள பொதுச் சேவை மையத்திற்கு நேரில் சென்றோ இ-கேஒய்சி செயல்முறையை முடிக்கலாம். இ-கேஒய்சி, ஆதார் இணைப்பு அல்லது கட்டண நிலை ஆகியவற்றில் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொண்டால் அரசு இதற்கெனப் பிரத்யேக உதவி எண்களை வழங்கியுள்ளது. பயனாளர்கள் அதிகாரப்பூர்வ பிஎம் கிசான் திட்ட உதவி எண்களான 155261 (கட்டணமில்லா எண்) மற்றும் 011-24300606 மூலம் உடனடியாக உதவி பெறலாம்.

Source link