அனைத்து குழந்தைகளுக்கும் தங்களுடைய பெற்றோர்களின் சொத்துகளில் முழு உரிமையும் இல்லை. சில சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கான சொத்துரிமை மறுக்கப்படும். அதுகுறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாகவே, பெற்றோரின் சொத்துகளில் குழந்தைகளுக்குப் உரிமை உண்டு என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் நிலைமை அப்படி இல்லை. சட்டம் உரிமைகளைப் பற்றி மட்டுமல்லாமல், கடமைகளைப் பற்றியும் கூறுகிறது. பெற்றோரைப் பராமரிக்கத் தவறுவது மட்டுமே சொத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கான ஒரே காரணம் அல்ல. குழந்தைகள் ஒரு பைசா கூட பெற முடியாதபடி தடுக்கும் பல சட்டரீதியான காரணங்களும் உள்ளன. பெற்றோரின் சொத்திலிருந்து குழந்தைகள் விலக்கி வைக்கப்படக்கூடிய சில காரணங்கள் உள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
பெற்றோருக்குச் சொந்தமான சொத்து!
சொத்துக்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பூர்வீகச் சொத்து, மற்றொன்று சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்து. பெற்றோர்கள் தங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தில் சொத்தை வாங்கியிருந்தால் அதன் மீது அவர்களுக்கு முழுமையான உரிமை உண்டு. அவர்கள் அதை ஒரு அந்நியருக்குத் தானமாக வழங்கலாம்; அறக்கட்டளைக்கு அளிக்கலாம் அல்லது உயில் மூலம் தங்கள் குழந்தைகளில் ஒருவரைச் சொத்துரிமையிலிருந்து விலக்கலாம். அத்தகைய சூழலில், குழந்தைகள் தங்கள் உரிமையைக் கோரி நீதிமன்றத்தைக்கூட அணுக முடியாது.
பெற்றோரிடம் தவறாக நடந்துகொள்ளுதல்!
மகன் அல்லது மகள் தங்கள் பெற்றோரைத் தாக்கினாலோ, மனரீதியாகத் துன்புறுத்தினாலோ அல்லது வேறு விதமாக மோசமாக நடத்தினாலோ ‘பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்புச் சட்டத்தின்’ கீழ் அவர்களைச் சொத்து உரிமையில் இருந்து வெளியேற்றப் பெற்றோர் தீர்ப்பாயத்தையோ அல்லது நீதிமன்றத்தையோ அணுகலாம். மேலும், அத்தகைய சூழலில் ஏற்கனவே வழங்கப்பட்ட சொத்து அல்லது தானப் பத்திரங்களையும் ரத்து செய்ய முடியும்.
குடும்பத்திலிருந்து பிரிந்த பிறகு புதிய ரேஷன் கார்டு வாங்குவது எப்படி?
கொலை முயற்சி!
இந்து வாரிசுரிமைச் சட்டமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சொத்து மீதான பேராசை அல்லது வேறு காரணங்களுக்காக ஒரு குழந்தை தன் பெற்றோரை கொலை செய்தாலோ அல்லது கொலை செய்ய முயன்றாலோ சட்டம் அவர்களை சொத்து விஷயத்தில் தகுதியற்றவர்களாக அறிவிக்கிறது. அதாவது, அத்தகைய குழந்தைக்குத் தங்கள் பெற்றோரின் சொத்தில் எந்த உரிமையும் இல்லை.
உயிலில் பெயர் இல்லாமல் போவது!
பெற்றோர் சட்டப்படி செல்லுபடியாகும் உயில் ஒன்றை எழுதி, அதில் ஒரு குழந்தையின் பெயரைச் சேர்க்கவில்லை என்றால் அவர்களின் மறைவுக்குப் பிறகு உயிலின்படியே சொத்து பிரிக்கப்படும். உயில் போலியானது என்பதை நிரூபிப்பது போன்ற வலுவான சட்டரீதியான காரணங்கள் இல்லாவிட்டால் அந்தக் குழந்தையால் சொத்தை அடைய முடியாது. முதியோர்களின் பாதுகாப்பைச் சட்டம் உறுதி செய்கிறது. நீங்கள் உங்கள் பெற்றோரைச் சரியாகப் பராமரிக்காவிட்டாலோ அல்லது அவர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளாவிட்டாலோ, அவர்களுடைய சொத்து மீதான உங்கள் சட்டப்பூர்வ உரிமை மிகவும் பலவீனமடைந்துவிடும். சட்டத்தின்படி, உரிமைகளுடன் எப்போதும் கடமைகளும் இணைந்து வருகின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில், பெற்றோரின் சுய சம்பாத்தியச் சொத்தில் பிள்ளைகளுக்குப் பிறப்பு உரிமை கிடையாது. பெற்றோர் விரும்பினால் மட்டுமே அந்தச் சொத்தை பிள்ளைகளுக்குத் தர முடியும். பரம்பரைச் சொத்தில் பிள்ளைகளுக்குப் பிறப்பிலேயே சம உரிமை உண்டு என்பது உண்மைதான். ஆனால் மேற்கூறிய சந்தர்ப்பங்களைப் பொறுத்து பிள்ளைகளுக்கான சொத்துரிமை சட்டப்படி மறுக்கப்படும்.
Source link
