puri jagannath rath yatra பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் 3 தேர்கள் வலம் வர காரணம்…பலரும் அறியாத ஆன்மீக ரகசியம்

உலகின் மிக முக்கியமான, பழமையான, உலகப் புகழ்பெற்ற, அதிக மக்கள் ஒன்று கூடும் திருவிழாக்களில் ஒன்று பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை. ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத சுக்ல பக்ஷ த்விதியை அன்று பூரி நகரமே பக்தி வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம். இந்த சமயத்தில் தான் 3 ரதங்களில், மூலவர்களே எழுந்தருளி வீதி உலா வரும் மிக பிரம்மாண்டமான ரத யாத்திரை நடைபெறும்.

பூரி ஜெகந்நாதர் திருத்தலத்தின் மகிமை :

இந்தியாவின் சார் தாம் (Char Dham) எனப்படும் நான்கு மாபெரும் புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளங்குவது, பூரி ஜெகந்நாதர் திருக்கோயில். இங்கு மகாபிரபு ஜெகந்நாதர், அவரது அண்ணன் பாலபத்ரர் (பலராமர்), சகோதரி சுபத்ரா தேவி மற்றும் ஸ்ரீ சுதர்சனர் என நான்கு தெய்வங்களும் ஒரே கருவறையில்
அருள்பாலிக்கின்றனர். இந்த அமைப்பே “சதுர்தா மூர்த்தி” என்று அழைக்கப்படுகிறது. பூரி சமய மரபின்படி, இந்த நான்கு திருமேனிகளும் நான்கு வேதங்களின் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.
ஸ்ரீ ஜெகந்நாதர் – யஜுர்வேதம்
ஸ்ரீ பாலபத்ரர் – சாமவேதம்
ஸ்ரீ சுபத்ரா தேவி – ரிக் வேதம்
ஸ்ரீ சுதர்சனர் – அதர்வண வேதம்

மூன்று தேர்களின் தெய்வீக அர்த்தம் :

ரத யாத்திரையில் ஒவ்வொரு தெய்வமும் தனித்தனி தேரில் எழுந்தருளுகின்றனர்.

1. தாலத்வஜா – இது ஸ்ரீ பாலபத்ரரின் தேர். பாரம்பரியமாக வீரம், தர்மம், ஆதிசேஷ தத்துவம் எனப் போற்றப்படுகிறது.
2. நந்திகோஷா – இது ஸ்ரீ ஜெகந்நாதரின் தேர். இந்தத் தேரே ரத யாத்திரையின் மையப் பெருமை. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தத் தேரை இழுக்கும் பாக்கியத்தைப் பெற ஆண்டுதோறும் காத்திருக்கின்றனர்.
3. தேவதலன (தேவதலனா / தர்ப்பதலன) – இது அன்னை சுபத்ரா தேவியின் தேர். சக்தி, கருணை, தாய்மை, பாதுகாப்பு என்பவற்றின் அடையாளமாக இந்தத் தேர் போற்றப்படுகிறது.

சுதர்சனர் ஏன் சக்கரமாக இல்லாமல் தூண் வடிவில் இருக்கிறார்?

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் மிகவும் ஆச்சரியமான அம்சங்களில் ஒன்று, ஸ்ரீ சுதர்சனர். மற்ற விஷ்ணு ஆலயங்களில் சக்கர வடிவில் வழிபடப்படும் சுதர்சனர், இங்கு மட்டும் ஒரு எளிய மரத்தூண் போன்ற வடிவில் அருள்பாலிக்கிறார். இதன் பின்னால் ஆழமான தத்துவம் உள்ளது. அதர்வண வேதத்தின் வடிவம் பூரி மரபின்படி, சுதர்சனர் அதர்வண வேதத்தின் மூல தத்துவமாகக் கருதப்படுகிறார். அவர் சங்கு, சக்கரம், வாள், சூலம் என்ற ஆயுதங்களின் சக்திகளைத் தன்னுள் கொண்ட அண்ட சக்தியின் வடிவமாகப் போற்றப்படுகிறார்.

தூண் வடிவம் என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாதது. அகண்ட பரம்பொருளின் அடையாளம் என்பதையும் உணர்த்துகிறது. சுதர்சனரின் தூண் வடிவம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விளக்கமும் கூறப்படுகிறது. ஒருமுறை சுதர்சன சக்கரத்திற்கு தன் ஆற்றல் குறித்து சிறிய அகந்தை தோன்றிய போது, பகவான்
கலியுகத்தில் எளிமையின் அடையாளமாக மரத்தூண் வடிவில் அருள்புரியுமாறு அருளினார் என்று சொல்லப்படுகிறது. .

நவகலேபரம் மரபு தொடரும் அற்புதம் :

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் மிகவும் அரிய நிகழ்வுகளில் ஒன்று, நவகலேபரம். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறாது. அதிக ஆஷாட மாதம் அமையும் ஆண்டுகளில் மட்டுமே நடைபெறும். பொதுவாக 12 முதல் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஜெகந்நாதர், பாலபத்ரர், சுபத்ரா,
சுதர்சனர் ஆகியோருக்கான புதிய வேப்பமரத் திருமேனிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த மரங்களைத் தேடும் புனித பயணத்திற்கு, பனஜாக யாத்திரை என்று பெயர். இது சுதர்சனரின் அனுமதியுடனேயே தொடங்குவது இன்றும் தொடரும் மரபாகும்.

ரத யாத்திரையில் முதலில் பயணம் செய்வது யார்?

ரத யாத்திரை தொடங்கும் போது கருவறையில் ஜெகந்நாதரின் இடப்புறம் இருக்கும் ஸ்ரீ சுதர்சனர், முதலில் அன்னை சுபத்ராவின் தேவதலன தேரில் எழுந்தருளுகிறார். அதன்பிறகே பாலபத்ரர், சுபத்ரா, ஜெகந்நாதர் தங்களது தேர்களில் எழுந்தருளுகின்றனர்.பூரி மரபின்படி, அன்னை சுபத்ரா, யோகமாயை சக்தியின் வடிவமாகக் கருதப்படுகிறார். அவரது பயணம் எந்தத் தடையும் இன்றி நிறைவேற ஜெகந்நாதர், தனது முதன்மை ஆயுதமான ஸ்ரீ சுதர்சனரை பாதுகாப்பிற்காக சுபத்ராவுடன் அனுப்புவதாக சொல்லப்படுகிறது. ன்னை சுபத்ராவின் தேரை பெண்கள் இழுப்பது மிகுந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது. இது தாய்மை, குடும்ப ஒற்றுமை, இறை பாதுகாப்பு, பெண்மையின் சக்தி என்பவற்றை நினைவூட்டும் அழகிய பக்தி மரபாகும்.

Source link