ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.
இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதியதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால், பெங்களூரு அணி தனது முதல் தோல்வியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆர்.சி.பி கேப்டன் ரஜத் பட்டிதார், “ராஜஸ்தான் பேட்டர்கள், குறிப்பாக வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்.
கடந்த போட்டிகளில் நாங்கள் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.
சுயாஷை பந்துவீச கொண்டு வர முடியாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் வெங்கடேஷ் ஐயர், ஷெப்பர்ட் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் அணியில் இருந்தனர்.

இந்த மூன்று பந்துவீச்சாளர்களைக் கொண்டே அந்த ஓவர்களை நாங்கள் சமாளித்திருக்க வேண்டும்.ஐபிஎல் போன்ற ஒரு போட்டி நிறைந்த கிரிக்கெட் தொடரில் விளையாடும்போது தவறுகள் நடக்கத்தான் செய்யும்.
ஆனால் அந்தத் தவறுகளில் இருந்து நாம் எப்படிக் கற்றுக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்” என்று பேசியிருக்கிறார்.
