தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி, தற்போது குயுபெராவில் நடைபெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ்: டாஸை இழந்து, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, துவக்கத்தில் படுமோசமாக தடுமாறியது. முதல் 4 பேட்டர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். எய்டன் மார்க்கரம் 11 (28), ஆக்கர்மேன் 6 (38), டேவிட் பேடிங்கம் 0 (1), மேத்யூ பிரிட்ஸ்கி 4 (17) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனதால், தென்னாப்பிரிக்க அணி, 40/4 என தடுமாறியது.
இப்படி, அணி படுமோசமாக தடுமாறும் தருணத்தில் களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா, தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி, 334 பந்துகளில் 18 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 179 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், இவருடன் சில பேட்டர்கள் நல்ல முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரியான் ரிகில்டன் 51 பந்தில் 31 ரன்னை சேர்த்த நிலையில், மார்கோ யான்சன் 100 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 85 ரன்களை குவித்து அசத்தினார்.
மேலும், பவுமாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிமன் ஹர்மர், 157 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 82 ரன்களை எடுத்தார். இதனால், தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 425/9 ரன்களை குவித்து அசத்தியது.
ஆஸ்திரேலிய அணி பௌலர், ஸ்காட் போலாந்த், 29 ஓவர்களில் 81 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க், 24.1 ஓவர்களில் 89 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார்.
பவுமா சாதனை: தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக் கேப்டன்கள், தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடிப்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது. இதுவரை மொத்தமே, 3 கேப்டன்தான் தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்துள்ளனர். 2014-ல், ஹசிம் அம்லா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 208 ரன்களை அடித்தார். 2016ஆம் ஆண்டில், இங்கிலாந்திற்கு எதிராக ஹசிம் அம்லா 201 ரன்களை சேர்த்தார். 2010-ல், இங்கிலாந்து அணிக்கு எதிராக கிரேம் ஸ்மித், 183 ரன்களை அடித்தார்.
குயுபெராவில், டெஸ்டில் சதம் அடித்த தென்னாப்பிரிக்க வீரர்கள் லிஸ்டில், பவுமா 2ஆவது வீரராக இணைந்துள்ளார். இதற்குமுன், 2001ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிராக கிப்ஸ் 196 ரன்களை அடித்து சாதனை படைத்திருந்தார்.
எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு? இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிரா ஆகவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. காரணம், கடைசி 2 நாட்கள் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கடைசி இரண்டு நாட்களில், ஆஸ்திரேலிய அணியின் 19 விக்கெட்களையும் எடுப்பது சாதாரணம் கிடையாது. இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிரா ஆகவே அதிக வாய்ப்புள்ளது.
அப்படி, டிரா ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷுப் புள்ளிப் பட்டியலில், தென்னாப்பிரிக்காவும், வங்கதேசமும் ஒரே மாதிரி புள்ளிகளுடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
