திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்குள் பல்வேறு கொலைகள் மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. ஆறு வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற தொடர் குற்றச்செயல்கள் அதிகரிப்பு சமூகத்தின் ஒழுக்க சீர்கேட்டிற்கு காரணமாகிறது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் மதுபோதையில் உள்ளது கவலைக்குரியது. இதை தடுப்பதற்கு அரசுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் பொறுப்புள்ளது. மேலும், சாதி அரசியலாக மாறினால் சமத்துவம் அழியும், மதம் அரசியலாக மாறினால் மனிதம் அழியும், பணம் அரசியலாக மாறினால் பண்பாடு மற்றும் ஒழுக்கம் அழியும். நல்ல ஒழுக்கம் மற்றும் அறநெறி கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்.
சசிகலா புதிய கட்சி தொடங்கியுள்ளதை வரவேற்கிறேன். அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைவரும் கட்சி தொடங்குகிறார்கள். அவர் மாற்றத்தை கொண்டு வர வாழ்த்துகிறேன்.
தி.மு.க. தனியார் மயத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. நாட்டின் பொருளாதார கொள்கையே தனியார் மயத்தை ஏற்றுக் கொண்டுவிட்டது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகள் ஏற்கனவே தனியார் மயமாகி விட்டது.
தமிழக அரசியலில் இன்னும் எந்த கூட்டணியும் முடிவாகவில்லை. எங்கள் கட்சி முன்கூட்டியே மக்களிடம் சென்று அரசியல் நிலைப்பாடுகளை விளக்கி வருகிறது. பெரிய பொருளாதார ஆதாரம் இல்லாததால் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு பெற முயற்சித்து வருகிறோம். தமிழர் நலனுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது.
உலக அரசியலை பொறுத்தவரை ஈரான், இஸ்ரேல் போர் போன்ற சர்வதேச மோதல்களில் பல நாடுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும். போர் எப்போதும் மனித உயிர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில், தமிழக அரசியல் போட்டியில் நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் அரசியல் மக்களுக்கு தேவையா? இல்லையா? என்பதே முக்கியம். மற்றவர்கள் அரசியலுக்கு வருவது தங்கள் கட்சியை பாதிக்காது.
கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படை தேவைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அரசியல் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க., தி.மு.க. போட்டி போட்டுக் கொண்டு பணம் வழங்குவது குறித்த கேள்விக்கு, நானும் உங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் தருவேன் எனக்கூறி அந்த இடத்தையே கலகலப்பாக்கினார். இதேபோல் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க சீமான் மறுத்துவிட்டார்.
