Sovereign Gold Bond வைத்திருக்கிறீர்களா? – பட்ஜெட் அறிவிப்பு படி, யாருக்கு வரி? யாருக்கு வரி இல்லை?

இனி Sovereign Gold Bond-ல் யாருக்கு வரி?

Sovereign Gold Bond | பட்ஜெட்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கலான மத்திய பட்ஜெட்டில், Sovereign Gold Bond (SGB) குறித்த அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

“மூலதன ஆதாய வரி ரத்து’ என்பது மட்டும் பலருக்கும் பாதி புரிந்தது… ஆனால், அது யாருக்கு… எப்படி என்கிற ஏகப்பட்ட குழப்பங்கள் மக்களிடம் இருந்து வருகின்றன.

இந்தக் கேள்விகளுக்கான பதிலை தெளிவாக விளக்குகிறார் Composite Investments Pvt. Ltd-ன் ஃபண்ட் மேனேஜர் கஜேந்திர மணவாளன்.

Composite Investments Pvt. Ltd-ன் ஃபண்ட் மேனேஜர் கஜேந்திர மணவாளன்
Composite Investments Pvt. Ltd-ன் ஃபண்ட் மேனேஜர் கஜேந்திர மணவாளன்

“SGB – இது இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் தங்கப் பத்திரம் ஆகும். இது பிசிக்கல் தங்கத்திற்கு நல்ல மாற்று. மேலும், இதை இந்திய ரிசர்வ் வங்கியே வழங்குவதால், இதில் பாதுகாப்பும் மிக அதிகம்.

‘இப்போது நகை வேண்டாம். ஆனால், தங்கத்தில் முதலீடு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், அதில் பாதுகாப்பும் வேண்டும்’ என்று நினைத்தவர்களுக்கு நல்ல நண்பன் இந்தத் தங்கப் பத்திரம்.

முதலீடு என்பதைத் தாண்டி, சாவரின் கோல்டு பாண்டிற்கு ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டியும் கிடைக்கிறது.

இந்தப் பத்திரத்தின் முதிர்ச்சி காலத்தில், அப்போதைய தங்க மதிப்பைப் பொறுத்து நமக்கு தொகை கிடைக்கும்.

இது தான் சாவரின் கோல்டு பாண்டின் சின்ன இன்ட்ரோ.

இப்போது பட்ஜெட் அறிவிப்பிற்கு வருவோம். இந்தப் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்ததாவது…

1. இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து நேரடியாக சாவரின் கோல்டு பாண்டை வாங்கியிருந்தால் மட்டுமே, முதிர்ச்சி காலத்தின் போது, மூலதன ஆதாய வரிக்கு (Capital Gain Tax) விலக்கு கிடைக்கும்.

2. ஒருவேளை, இந்தப் பத்திரத்தைச் சந்தையில் இருந்து வாங்கியிருந்தால், முதிர்ச்சி காலம் வரை பத்திரத்தை வைத்திருந்தாலும், மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.

3. வருகிற ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு, விற்கப்படும் சாவரின் கோல்டு பாண்டில் இருந்து வரும் வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.

வரி
வரி

இன்னும் புரியவில்லையா… சின்ன உதாரணத்துடன் பார்ப்போம்.

SOVEREIGN GOLD BONDS 2.50% DECEMBER 2031 SR-III 2023-24 – இது 2024-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. இந்தப் பத்திரத்தின் அப்போதைய முக மதிப்பு ரூ.6,199. இதன் முதிர்ச்சி காலம் ஜனவரி 30, 2031.

இந்தப் பத்திரத்தை ராஜூ, ராமு வாங்கியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

ராஜூ இந்தப் பத்திரத்தை 2031-ம் ஆண்டு வரைக்கும் அவரே வைத்திருக்கிறார். அவருக்கு 2031-ம் ஆண்டு கிடைக்கும் முதலீட்டுத் தொகை ப்ளஸ் வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி வசூலிக்கப்படாது.

ராமு இந்தப் பத்திரத்தை விற்கிறார்… விற்றுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அவரது வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.

தங்கம்
தங்கம்

ராமுவிடம் இருந்து சோமு இந்தப் பத்திரத்தை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இந்தப் பத்திரத்தை 2031-ம் ஆண்டு முதிர்ச்சி காலம் வரையில் வைத்திருந்தாலும் கூட, இவருக்கு வரும் வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.

சோமு இதற்கு முன்பு அந்தப் பத்திரத்தை வாங்கியிருந்தாலும் கூட, இனி மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.

பட்ஜெட் அறிவிப்பிற்கு முன், சோமு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link