Taapsee Pannu: `மோடி தான் பிடித்த அரசியல் தலைவர்; ஏனென்றால்…' – வைரலாகும் டாப்ஸி பண்ணுவின் வீடியோ

பாலிவுட் நடிகை டாப்ஸி பண்ணு நடிப்பில் அஸி திரைப்படம் உருவாகியிருக்கிறது.

டாப்ஸி பண்ணு

பாலிவுட் நடிகை டாப்ஸி நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அஸி’ (Assi). பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் போது, அவரிடம் கேட்கப்பட்ட அரசியல் கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த நேர்காணலில், “உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? பிரதமர் நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா?” என்ற கேள்விக்கு, டாப்ஸி சிறிதும் தயக்கமின்றி பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்து, `எனக்கு இன்னும் இந்த நாட்டில் வாழ வேண்டும்’ என்றார். அந்த பதில், கிண்டலாகவும் அதேசமயம் அரசியல் பதிலாகவும் இருந்தது.

Taapsee Pannu
Taapsee Pannu

மற்றொரு வீடியோ க்ளிப்பில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், சாவர்க்கர் ஆகியோரின் படங்களைக் காண்பித்து, ‘இவர்களில் யார் மகாத்மா என நினைக்கிறீர்கள்’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், மகாத்மா காந்தியைத் தேர்வுசெய்து, ‘நான் படித்தவரையில் மகாத்மா என்றால், காந்திதான்’ எனக் குறிப்பிட்டார்.

இந்த வீடியோ க்ளிப்கள் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதற்கு ஆதரவாகவும் எதிர்மறையாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், “இது வெறும் கருத்து மட்டுமல்ல, இன்றைய காலத்தின் கசப்பான யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அதே நேர்காணலில் மம்தா பானர்ஜி, ஸ்மிருதி இரானி, மாயாவதி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, முதலில் சுஷ்மா ஸ்வராஜின் பெயரை டாப்ஸி குறிப்பிட்டார். பின்னர் கொடுக்கப்பட்ட விருப்பங்களில் ஸ்மிருதி இரானியைத் தேர்ந்தெடுத்தார்.

Source link