TN Assembly Election| இன்று மாலை தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு… உடனடியாக அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள்

சென்னை:

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந்தேதி முடிவடைகிறது. புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் நிறைவு பெறுகிறது.

இந்த 5 மாநிலங்களிலும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தலை நடத்தி முடித்திட இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இதனை முன்னிட்டு 5 மாநிலங்களுக்கும், தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 25-ந்தேதி முதல் 3 நாட்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் ஆய்வு பணிகள் நடந்தது.

இதேபோல் கேரளா, அசாம், மேற்கு வங்காளத்திலும் தேர்தல் ஆணையம் அனைத்து ஆய்வுகளையும் முடித்து விட்டது. 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன.

5 மாநில தேர்தல் பணிகள் குறித்து டெல்லியில் ஏற்கனவே மதிப்பாய்வு நடைபெற்றது. இதில் தேர்தலுக்கான தேதிகளையும், வேட்புமனு தாக்கல் போன்ற தேர்தல் நடைமுறைகளுக்கான தேதிகளையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே தேர்வு செய்தனர்.

5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக இறுதிக் கட்ட ஆயத்த பணிளுக்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரிகள் வந்து தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை தொடங்கி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அதேபோல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 2 தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது தேர்தல் தேதி அட்டவணையை வெளியிடுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது. இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர்கள் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் முறைப்படி அறிவிக்கிறார்.

கடந்த ஆண்டைப்போல தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக அதுவும் முதல் கட்டத்திலேயே தேர்தலை நடத்தி முடித்திட தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் ஏப்ரல் 3-வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. அசாமில் 2 கட்டங்களாகவும், மேற்கு வங்காளத்தில் 5 அல்லது 6 கட்டங்களாகவும் தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் கடந்த முறை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

தற்போது 5 மாநில சட்டசபை தேர்தலுடன் சில மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், தகவல் தொழில் நுட்ப உதவிப் பணியாளர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகம், புதுச்சேரிக்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவப் படையினரும் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் முக்கிய பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் காரணமாக தேர்தல் தேதி அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் இன்று பரபரப்பாக காணப்பட்டது.

Source link