தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி (வியாழக்கிமை) நடக்கிறது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் தொண்டர்களும் களத்தில் சுழன்று வருகிறார்கள்.
தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முற்றுகையிட இருக்கிறார்கள். அடுத்த வாரம் பிரதமர் மோடியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்துக்கு பிரசாரம் செய்ய வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகிறார். அவர் குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகிற 15-ந்தேதி விமானம் மூலமாக கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நாகர்கோவில் வருகிறார். அவர் வரக்கூடிய ஹெலிகாப்டர் மறவன் குடியிருப்பில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் தரையிறங்குகிறது.
பின்பு அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் வேப்பமூடு பகுதிக்கு வருகிறார். அங்கிருந்து வடசேரி வரையிலான ஒரு கிலோமீட்டர் தூரம் நடைபெறும் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அப்போது அவர் பா.ஜ.க. வேட்பாளர்கள் நாகர்கோவில் தொகுதி எம்.ஆர்.காந்தி, விளவங்கோடு தொகுதி விஜயதரணி, குளச்சல் தொகுதி சிவக்குமார், பத்மநாபபுரம் தொகுதி ரமேஷ், கிள்ளியூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் நிபின் சோமன், கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய் சுந்தரம் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பிரதமரின் பிரசாரத்தில் 6 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அவர்கள் மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. அவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கக்கூடிய போலீஸ் ஆயுதப்படை மைதானம், அவர் காரில் பயணிக்கக்கூடிய சாலைகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.
முக்கியமாக பிரதமர் ரோடு-ஷோ செல்லக்கூடிய வேப்பமூடு முதல் வடசேரி வரையிலான பகுதி முழுவதுமாக பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அவர்கள் ஒரு சில நாட்களில் நாகர்கோவிலுக்கு வர உள்ளனர்.
பிரதமர் மோடியை தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 17-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார்.
அவர் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
நாளை மறுநாள் (12-ந் தேதி) தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். காலையில் சென்னை விமான நிலையம் வரும் அவர் ஹெலிகாப்டரில் ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார்.
அங்கு தனது தந்தை ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு பிரசாரத்தை தொடங்குகிறார். ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
பின்னர் பொன்னேரி, வேளச்சேரி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். பிரசாரத்தின் போது ராகுல் ‘ரோடுஷோ’ செல்வதற்கான இடங்களை காங்கிரசார் தேர்வு செய்து வருகிறார்கள்.
சென்னை பிரசாரத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இருவரும் ஒரே மேடையில் பேசுகிறார்கள்.
அப்போது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ராகுல் மீண்டும் 15 மற்றும் 16-ந்தேதிகளில் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வரவிருப்பதாகவும் அப்போது பிரியங்காவும் வருவார் என்றும் அமைப்புச் செயலாளர் ராம்மோகன் கூறினார்.
பிரசாரத்துக்கு வரும் ராகுல், பிரியங்கா இருவரும் தனித்தனியாக கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் பிரசாரம் மேற்கொள்ள பயண திட்டங்கள் தயாராகி வருகிறது.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இன்று மாலையில் தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று மாலையில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னையில் கடந்த 2 நாட்களாக அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பக்கத்து மாவட்டங்களில் இன்று அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலையில் சென்னையில் பிரசாரம் செய்கிறார். ராயபுரம், ஆர்.கே.நகர், மயிலாப்பூர் தொகுதிகளில் அவர் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி மாலை 4 மணிக்கு திருச்சுழியிலும் அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று மாலை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், நெல்லை ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மாலையில் பண்ருட்டியில் பிரசாரம் செய்கிறார். இரவு 8 மணி அளவில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் பொது கூட்டத்தில் பேசுகிறார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை 4 மணிக்கு சீர்காழியிலும், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தர்மபுரியிலும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சாத்தூர் மற்றும் கிள்ளியூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
இப்படி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் வீதி வீதியாக சென்று தங்களுக்குஓட்டு போடுமாறு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற 23-ந்தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் 21-ந்தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதன் மூலம் இன்னும் 11 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும் என்பதால் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தி.மு.க. வேட்பாளர்கள் அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் நிலையில் அ.தி.மு.க. வேட்பளர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட அரசுக்கு எதிரான பல்வேறு விஷயங்களை கையில் எடுத்து ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். அதே நேரத்தில் தங்களது தேர்தல் வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
