சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு இந்த தேர்தலில் ஒரு தொகுதியை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குறைந்தது 2 தொகுதியாவது ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
ஆனால் ஒரு தொகுதி தான் தருவதாக தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு அவரிடம் கூறி உள்ளது. இதில் வேல்முருகன் எம்.எல்.ஏ. அதிருப்தி அடைந்து உள்ளார்.
இதனால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை உயர்நிலை குழு அவசர கூட்டத்தை வேல்முருகன் எம்.எல்.ஏ. சென்னையில் கூட்டி இருந்தார். விருகம்பாக்கம் சின்மையா நகர் ஐயப்பா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேல்முருகன் எம்.எல்.ஏ., கட்சியின் துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் மற்றும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி தருவதை ஏற்க கூடாது என்றும், 2 தொகுதியாவது ஒதுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள்.
ஒரு தொகுதியை ஒதுக்கினால் அதை ஏற்க வேண்டாம். அதற்கு பதில் தனியாகவே தேர்தலை சந்திக்கலாம் என்றும் பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
