TN Election 2026 | என் மீது வழக்கு போடுங்கள், பார்க்கலாம்: ஆ. ராசா ஆடியோ விவகாரத்தில் இ.பி.எஸ். சவால்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்று பத்திரிகையில் பார்த்தேன், என் மீது வழக்கு போடுகிறாராம். போடுங்கள். பல வழக்குகளைப் பார்த்தவன். ஆ.ராசா பேசும் ஆடியோ வைரலானது, அதில் பேசியிருந்ததைச் சொன்னேன். அப்படி பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ராசா மீது நடவடிக்கை எடுத்தால் அடுத்த ஆடியோ விட்டுவிடுவார். அதற்கு என்மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்?

ஆடியோவில் வந்த செய்தி உண்மையாக இருக்கலாம். 2021 தேர்தல் அறிக்கையில் அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது, யாராக இருந்தாலும் விடமாட்டேன் என்றார். இதே கருத்தை நானும் சொல்கிறேன். கருணாநிதி எதிரியாக இருந்தாலும், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டாரா என்று விசாரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் அம்மாவை சொன்னீர்கள், அதேபோல் இதுவும் முன்னாள் முதல்வர் விவகாரம். எனவே, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் கவலையில்லை.

அப்பா ஸ்டாலின், மகன் உதயநிதி, கனிமொழி என ஆளாளுக்கு பேசுகிறார்கள். யார் வேண்டுமானாலும் பேசட்டும், இது திமுக-வுக்கு இறுதித் தேர்தல் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அவர்கள் குடும்பத்தைத் தவிர்த்து யாராவது பேச முடியுமா? தமிழ்நாடு முழுவதும் அவர்களை தேர்தல் பிரசாரத்திற்கு அனுப்பினார்களா? கருனாநிதி குடும்பத்தினர் யாரையும் விட மாட்டார்கள். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா..? இங்கிருக்கும் ஒருவர் முதல்வரானால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? இனி தமிழ்நாடு முதலமைச்சராக வர எல்லோருக்கும் உரிமையுண்டு.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Source link