அதிகாலையில் வரும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, விளக்கேற்றி வழிபடுவது அளவில்லாத நன்மைகளை தரும் என்றாலும் அனைவராலும் அந்த சமயத்தில் எழுந்து வழிபாடு செய்ய முடிவது கிடையாது. அப்படி பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழ முடியாதவர்கள், அதன் பலனை பெறுவதற்கு என்ன செய்யலாம் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு இணையான மற்றொரு சிறப்பான, தெய்வீக ஆற்றல் நிறைந்த நேரம் தான் விஷ்ணு முகூர்த்தம். இந்த நேரத்தில் விஷ்ணு தீபம் ஏற்றி வழிபடுவதால் வாழ்க்கையில் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும்.
தினமும் சூரிய உதயத்திற்கு முந்தைய இரண்டு மணி நேரத்தை, அதாவது அதிகாலை 4 மணி முதல் 6 ணி வரையிலான நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்கிறோம். இந்த நேரத்தில் பிரபஞ்ச ஆற்றலும், தெய்வீக ஆற்றலும் அதிகரித்து காணப்படும் என சொல்லப்படுகிறது. அதுனால் தான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியத்திற்கும் பல மடங்கு அதிக பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடுகள், முன் வைக்கும் வேண்டுதல்கள் மிக விரைவாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதே போல் வேண்டிய வரங்களை தரக் கூடிய சிறப்பான நேரம் தான் விஷ்ணு முகூர்த்தம் .
விஷ்ணு முகூர்த்த என்றால் என்ன?
தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தை விஷ்ணு முகூர்த்தம் என்று ஆன்மீகத்தில் அழைக்கிறார்கள். இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது அதிக நன்மைகளை தரும். பெருமாளை மனதார நினைத்து விளக்கேற்றி, வேண்டிக் கொண்டால் வீட்டில் செல்வம் பெருகும், இறையருள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. விஷ்ணு முகூர்த்தம் எவ்பது பெருமாளை வழிபடுவதற்கு உகந்த நேரமாகும். இந்த நேரத்தில் வழிபடுவதால் கர்மவினைகள் நீங்கி, மன அமைதி கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
தன்னுடைய மார்பில் மகாலட்சுமியை வைத்திருக்கும் மகாவிஷ்ணுவை நாம் வழிபடும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்திலும் இருந்து நம்மை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் பொருளாதார முன்னேற்றத்தையும் கொடுத்து நல்ல மாற்றங்களை தரும் அற்புதமான கடவுளாக தான் மகாவிஷ்ணு திகழ்கிறார். மனதார நாராயணா என்று கூறினாலே ஓடி வரக்கூடிய அற்புதமான தெய்வம் ஆக திகழக்கூடியவர்தான் மகாவிஷ்ணு.
விஷ்ணு தீபம் ஏற்றும் முறை :
வீட்டில் இருக்கும் பெருமாள் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து, பெருமாள் படத்திற்கு முன்பாக சங்கு கோலம் போட வேண்டும். பிறகு அதற்கு மேல் ஒரு சிறிய தட்டு அல்லது தாம்பூலத்தில் துளசி இலைகளை பரப்பி வைத்து, அதன் மீது அகல் விளக்கை வைத்து, அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை தினமும் தொடர்ந்து ஏற்றுவது நல்லது. தொடர்ந்து 48 நாட்கள் கூட ஏற்றலாம். தினமும் துளசி இலைகளை பெருமாளுக்கு படைத்து வழிபடுவது வீட்டில் தெய்வீக அருளை நிறைய செய்து, வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை தரும். பெருமாளுக்கு நைவேத்தியமாக கற்கண்டு, உலர் திராட்சை, நெல்லிக்கனி, மாதுளம் பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் படைத்து வழிபடலாம். அதோடு “ஓம் நமோ நாராயணா” மந்திரத்தை 27 முதல் 1008 முறை வரை சொல்லி வழிபடலாம். இது பாவங்களை போக்கி, புண்ணியத்தை தரும் மகா மந்திரமாகும். இந்த தீபத்தை தினமும் காலை பிரம்ம முகூர்த்தம் மற்றும் விஷ்ணு முகூர்த்தம் ஆகிய இரண்டு வேளைகளிலும் ஏற்றலாம். அப்படி இரண்டு வேளையும் ஏற்ற முடியாதவர்கள் மாலையில் மட்டுமாவது ஏற்றலாம்.
பலன்கள் :
இந்த விளக்கை தினமும் ஏற்றி, விஷ்ணு முகூர்த்த வேளையில் பெருமாளை வழிபடுவதால் துன்பங்கள் அனைத்திலும் இருந்து அவர் நம்மை காப்பாற்றுவர் என்பது நம்பிக்கை. அதோடு பெருமாளை மனதார வழிபடுவதால், மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, பதினாறு வகையான செல்வங்களும் கிடைக்கும். வேண்டுதல்கள் நிறைவேறும்.
Source link
