கென் கருணாஸ் ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது ‘யூத்’ படத்தை இயக்கி, இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். அனிஷ்மா, தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது.
இதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டிருக்கிறார். தனுஷ் குறித்து மேடையில் பேசிய கருணாஸ், ” ‘காதல் கொண்டேன்’ படத்தை பார்த்துவிட்டு, இந்திய சினிமாவுக்கு, தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகச்சிறந்த நடிகனை கொடுத்திருக்கீங்க என செல்வராகவனிடம் சொன்னேன்.
இன்னைக்கு இந்த சின்ன வயசுல ரெண்டு தேசிய விருது வாங்கின ஒரு நடிகர் தனுஷ் மட்டும் தான். இவர் நடிக்க வந்த புதுசுல நிறைய கேலி செஞ்சாங்க.
நிறைய பத்திரிகைகள் இவர் எல்லாம் எதுக்கு நடிக்க வந்தாரு’ன்னு விமர்சிச்சு எழுதுனாங்க. ஆனா இன்னைக்கு இந்த அளவுக்கு வளர்ந்துருக்காரு.
12 வயசுல இருந்து நான் சினிமாவுலதான் இருக்கேன். சினிமாவை தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது. சினிமாவுக்கு உண்மையா இருந்தா, சினிமா நம்மல ஒருபோதும் கைவிடாது.

அப்படி நான் வச்ச நம்பிக்கை தான் என் மகன் கென். இன்னைக்கு தவிர்க்க முடியாத சூழல்ல அவர் இயக்குநராகி இருக்காரு.
ஆனால் அதை கத்துக்கோன்னு சொன்னது தனுஷ் தான். தனுஷ் தேர்வு பண்ண ஆட்கள் யாரும் தோற்றது கிடையாது. எல்லாரும் பெரிய இடத்தில தான் இருக்காங்க. ஆனால் நான் பெயர் சொல்ல விரும்பல.
அவரோட பழகி பல வருஷம் ஆகிருச்சு. சினிமாவை தவிர வேற எந்த சிந்தனையும் இல்லாத ஒரு நபர் அவர்தான்” என கருணாஸ் பேசுயிருக்கிறார்.
