சவுதி அரேபியா: ஃபிளை துபாய் விமான தாக்குதல் சதியை சாமர்த்தியமாக முறியடித்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ஃபிளை துபாய் விமானம் துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்டது.
இந்த விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் திடீரென இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சார் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தினார். தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்து மயக்க நிலைக்குச் சென்ற நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார், தனது கடைசி முயற்சியாகக் காக்பிட் கதவைத் திறந்தார்.
இதனால் ஊழியர்களும் பயணிகளும் உடனடியாகக் காக்பிட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் விமானம் பெரும் விபத்தில் சிக்குவதிலிருந்து தப்பியது. இந்த நிலையில், பலரின் உயிரை காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் விமானக் குழுவினருக்கு யுஏஇ உயரிய சிவில் விருதான ‘ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆர்டர் ஆஃப் சயீத் II’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த விருதை ஸ்மித் மச்சாருக்கு துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேரடியாக வழங்கி சிறப்பித்தார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ரஷீத் ஆகிய இருஉயர் தலைவர்களும் விமானக் குழுவினரை நேரில் சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
