ஜப்பானில் நடைபெறும் ஏசியன் கேம்ஸ் தொடருக்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மகளிர் அணி, செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் பங்கேற்க உள்ளது. பிறகு, செப்டம்பர் 20ஆம் தேதி அரையிறுதியும், 22ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து, ஆடவர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி, காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடும். அடுத்து, அக்டோபர் 1ஆம் தேதி அரையிறுதி போட்டியும், 3ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அன்றைய தினம் இந்திய தேசிய ஆடவர் அணி, ஒரே நாளில் இரண்டு நாடுகளில் விளையாடும் நிலைமை ஏற்படும்.
ஏசியன் கேம்ஸ் பைனல் நடைபெறும் அதே நாளில்தான், இந்திய ஒருநாள் அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இதற்குமுன்பும், இதேபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 1998ஆம் ஆண்டு, செப்டம்பர் 12ஆம் தேதி, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, இரண்டு நாடுகளில் விளையாடியது. மலேசியாவில் காமன்வெல்த் கேம்ஸ் தொடரிலும், டொரொன்டோவில் சகாரா பிரன்ட்ஷிப் கப் தொடரிலும் விளையாடியிருந்தது.
ஏசியன் கேம்ஸ் தொடருக்கு, தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் செல்ல உள்ளார். அதேநேரத்தில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு, கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக இருப்பார்.
ஏசியன் கேம்ஸ், இந்திய அணி பட்டியல்: ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி.
கடந்த முறை நடைபெற்ற ஏசியன் கேம்ஸ் தொடரில், இந்திய மகளிர் மற்றும் இந்திய ஆடவர் அணிகள் கோப்பை வென்றது. கடந்த ஏசியன் கேம்ஸ் தொடர், 2022ஆம் ஆண்டில், சீனாவில் நடைபெற்றது.
ஏசியன் கேம்ஸ் 2026 தொடரில் மொத்தம் 10 ஆடவர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளது. இதில், தகுதி சுற்றில் மொத்தம் 6 அணிகள் விளையாடும். இந்த இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், காலிறுதிக்கு தகுதிபெறும். காலிறுதி சுற்றுக்கு ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக தகுதிபெற்றுவிட்டது. பிறகு அரையிறுதி, பைனல் நடைபெறும். மேலும், வெண்கல பதக்கத்திற்கான போட்டியும் நடைபெறும்.
தகுதி சுற்றில் ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஹாங் ஹாங், மலேசியா, ஓமன், நேபாள் ஆகிய அணிகள ்விளையாடும். இந்த தகுதி சுற்று போட்டிகள், செப்டம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அடுத்து, காலிறுதி போட்டிகள் செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும். அரையிறுதி போட்டிகள், அக்டோபர் 1ஆம் தேதி நடத்தப்படும். அக்டோபர் 3ஆம் தேதி வெண்கல பதக்கத்திற்கான போட்டியும், அதே 3ஆம் தேதி பைனலும் நடைபெறும்.
ஆசியன் கேம்ஸ் 2022 தொடரின் பைனலுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்றது. இருப்பினும், மழை காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. பிறகு, அதிக புள்ளிகள், அதிக நெட் ரன்ரேட் அடிப்படையில், இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
