அசாமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஷாசாத் பட்டி நெட்வொர்க் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மூன்று பேரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
அசாமில் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் ஒருங்கிணைந்த நடவடிக்கை ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.
ஷாசாத் பட்டி ஐஎஸ்எஸ் பயங்கரவாத அமைப்பு:
அப்போது பாகிஸ்தானின் ஷாசாத் பயங்கரவாத அமைப்பு இணையவழியில் தீவிரவாதத்தைப் பரப்புவது, உளவு பார்த்தல், சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொள்முதல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இந்த அமைப்பு பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்புடன் (ISI) தொடர்புடைய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
காலிஸ்தான் ஆயுதப் படை, காலிஸ்தான் விடுதலை இராணுவம், ஷேர்-இ-பஞ்சாப் படைப்பிரிவு மற்றும் தெஹ்ரிக்-இ-தாலிபான் ஹிந்துஸ்தான் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை கூறியது.
2026 பிப்ரவரி 22 மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் நடந்த தனித்தனி சம்பவங்களில் இரண்டு பஞ்சாப் காவல்துறை பணியாளர்களின் கொலைகளுக்கு, இந்த பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதாகவும் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறை அறிக்கை:
இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு பிறகு காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஷாஜாத் பட்டி நெட்வொர்க், இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை நிறுவ முயற்சி செய்து வருகிறது.
அதன் மூலம் அந்த அமைப்பு நாசவேலைத் திட்டங்கள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்த நெட்வொர்க் ஆரம்பத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது.
2026-ஆம் ஆண்டில், அசாம் மற்றும் வடகிழக்கில் அதன் நடவடிக்கைகள் எங்கள் கவனத்திற்கு வந்தன. அதன் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை துப்ரி, சிரங் மற்றும் பர்பேட்டாவில் ஒரே நேரத்தில் நடவடிக்கைகளை தொடங்கியது.
மூன்று பேர் கைது:
இதன் விளைவாக, இந்த நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அக்ரமுல் இஸ்லாம், அமினுர் ரஹ்மான் மற்றும் அப்துல் ஹுசைன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து ஐந்து கைபேசிகள், ஏழு சிம் கார்டுகள், ஆதார் அட்டைகள், வங்கி பாஸ்புக்குகள், பற்று அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை புலனாய்வாளர்கள் கைப்பற்றினர்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
