குவஹாத்தி: அசாமில் கனமழைக்கு, 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 3.32 லட்சம் பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, வடகிழக்கு மாநிலமான அசாமில், கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால், சிவசாகர், சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகான், சோனித்பூர் மற்றும் காம்ரூப் பெருநகரம் ஆகிய மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன-.
இந்த ஏழு மாவட்டங்களிலும் உள்ள 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியுள்ளன. இங்குள்ள 1.12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ள பாதிப்பு குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
அசாமில் 24 மணி நேரத்தில் ஏழு பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 75 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிவசாகர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 3.32 லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கான நிவாரண நிதியை, 4 லட்சம் ரூபாயில் இருந்து, 9 லட்சம் ரூபாயாக உயர்த்தி, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உத்தரவிட்டுள்ளார்.
